மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க் கூட்டம் கலெக்டர் ஸ்ரீகாந்த் தலைமையில் நடந்தது. இந்த கூட்டத்தில், சிபிஐஎம் கட்சியின் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில துணை செயலாளர் துரைராஜ் கலந்து கொண்டு கலெக்டரிடம் போலி மகளிர் குழக்கள் பெயரில் நடைபெறும் மோசடி குறித்து புகார் மனு அளித்தார்.
பின்னர் துரைராஜ் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
மயிலாடுதுறையில் உள்ள ஸ்டேட் வங்கியில் 2 கடைநிலை ஊழியர்கள், முன்னாள் மேலாளரின் உதவியுடன் மகளிர் சுயஉதவிக் குழுக்கள் பெயரில் வங்கி கணக்கு தொடங்கி, தங்களுக்கு தெரிந்த பெண்கள் பெயரில் கடன் வழங்கியுள்ளனர். ரூ.5 லட்சம் முதல் ரூ.10 லட்சம்வரை கடன் வழங்கியதாக கூறி ஒவ்வொரு குழுவுக்கும் சுமார் ரூ.25,000 வரை மட்டும் கடன் வழங்கி விட்டு, மீதி தொகையை 3 பேரும் கையாடல் செய்துள்ளனர்.
ஆனால் தாங்கள் வாங்காத கடன்தொகையை கட்டச் சொல்லி வங்கி நிர்வாகம் அந்த பெண்களை நிர்பந்தித்து வருகிறது. தற்போது மேலாளர் பணியிடமாற்றம் செய்யப்பட்டுவிட்டார். கடைநிலை ஊழியர்கள் தற்போது பணியில் இல்லை. இதுகுறித்து, கடந்த ஆண்டு வங்கியின் முன் பாதிக்கப்பட்ட பெண்கள் காத்திருப்பு போராட்டம் நடத்தினர். பின்னர் அப்போதைய மாவட்ட ஆட்சியர் ஒரு குழுவை அமைத்து 30 நாட்களுக்குள் விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க சொல்லியிருந்தார்.
ஆனால் 5 மாதங்கள் ஆகியும் இன்னும் அந்த குழு என்ன நடவடிக்கை எடுத்தது என்று தெரியவில்லை. இதுதொடர்பாக ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுத்து பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நீதி கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் .
இவ்வாறு அவர் கூறினார்.