மயிலாடுதுறை மாவட்டம் திருவெண்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் மூதாட்டி திரிபுரசுந்தரி(72). இவருக்கு அதே கிராமத்தில் ஒரு மாடி வீடு மற்றும் நிலம் உள்ளது. இந்த வீடு மற்றும் நிலத்தை அவரது மகன் குமரேசன், மருமகள் சத்யா ஆகிய இருவரும் அபகரித்துக் கொண்டதுடன் மூதாட்டியையும் துன்புறுத்தியதாக கூறப்படுகிறது.
இதனால் அவர் தனியாக ஒரு குடிசையில் வசித்து வருகிறார். உடல்நலம் குன்றிய நிலையில் ரேஷனில் கிடைக்கம் அரிசியைக்கொண்டு வாழ்க்கை நடத்தி வருகிறார். தற்போது உடல் நலமும் மிகவும் பாதிக்கப்பட்டதால் அவர் தனது மகன் தன்னை கவனிக்க நடவடிக்கை எடுக்கும்படி திருவெண்காடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். ஆனால் போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இந்நிலையில், மகன் மற்றும் மருமகளால் தனது உயிருக்கு ஆபத்து உள்ளது என்றும், அவர்கள் தன்னிடம் இருந்து ஆக்கிரமித்துக் கொண்ட இடம் மற்றும் நிலத்தை மீட்டுத் தரவும் வலியுறுத்தி மூதாட்டி திரிபுரசுந்தரி நேற்று மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்து கண்ணீர் மல்க கலெக்டரிடம் மனு அளித்தார். இது குறித்து நடவடிக்கை எடுப்பதாக கலெக்டர் உறுதி அளித்தார். அந்த மனு மீது நடவடிக்கை எடுக்கும்படி கோட்டாட்சியருக்கு அவர் பரிந்துரை செய்தார்.