தமிழகத்தின் 38-வது மாவட்டமாக மயிலாடுதுறை மாவட்டம் கடந்த 2020-ம் ஆண்டு மார்ச் மாதம் அறிவிக்கப்பட்டு டிசம்பர் 28-ந் தேதி முதல் செயல்பட்டு வருகிறது. தற்போது மாயூரநாதர் கீழ வீதி வணிகவரி அலுவலக கட்டிடத்தில் தற்காலிக கலெக்டர் அலுவலகம் செயல்படுகிறது.
மயிலாடுதுறை மாவட்ட புதிய கலெக்டர் அலுவலக கட்டிடம் கட்டுவதற்காக மன்னம்பந்தல் ஊராட்சி மூங்கில்தோட்டம் பால்பண்ணை பகுதியில் 13 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டு ரூ.114 கோடியே 48 லட்சம் மதிப்பில் தரைத்தளம் மற்றும் 7 தளங்கள் கொண்ட புதிய கட்டிடம் கட்டப்பட்டு வந்தது.
கட்டிட பணிகள் நிறைவடைந்து புதிய கலெக்டர் அலுவலக திறப்பு விழா இன்று (திங்கட்கிழமை) காலை நடந்தது. இதற்காக 10.30 மணிக்கு முதல்வர் வந்தார். அவருக்கு போலீஸ் அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. பின்னர் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்கலெக்டர் அலுவலகத்தை திறந்து வைத்தார். அங்கு வைக்கப்பட்டிருந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி படத்திற்கு, முதல்வர் ஸ்டாலின் மரியாதை செய்தார்.
விழாவில் அமைச்சர்கள் கே. என். நேரு, எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், ரகுபதி, மெய்யநாதன், மகேஸ் பொய்யாமொழி, எ.வ.வேலு, டிஆர்பி ராஜா, கே.கே. எஸ்.எஸ். ஆர். ராமச்சந்திரன், கலெக்டர் மகாபாரதி, முன்னாள் மத்தி்ய அமைச்சர் மணிசங்கர அய்யர், மார்க்சிய கம்யூனிஸ்ட் செயலாளர் பாலகிருஷ்ணன், எம்.பிக்கள் , எம்.எல்.ஏக்கள், டெல்லி பிரதிநிதி ஏகேஎஸ் விஜயன் மற்றும் பலர் கலந்து கலந்து கொண்டனர்.
பின்னர் கலெக்டர் அலுவலகத்தை முதல்வர் சுற்றிப்பார்த்தார். அதைத்தொடர்ந்து விழா மேடைக்கு வந்தார். கலெக்டர் மகாபாரதி வரவேற்று பேசினார். அதைத்தொடர்ந்து முதல்வருக்க மயிலாடுதுறை மாவட்ட திமுக சார்பில் வெள்ளி செங்கோல் , மற்றும் கருணாநிதி, ஸ்டாலின், உதயநிதி அடங்கிய புகைப்படம் நினைவு பரிசாக வழங்கப்பட்டது. விழாவில் பயனாளிகள் உள்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.