இந்தியாவின் அண்டை நாடான மியான்மரில் நெற்று (28.03.2025) சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 7.7 ஆகப் பதிவாகியுள்ளது. இதனால் நாட்டின் பல்வேறு நகரங்களில் கட்டிடங்கள் இடிந்தன. இந்திய நேரப்படி காலை 11:55 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கம் தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. அதே சமயம் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்து அனைவரும் வெளியேறி வீதியில் தஞ்சமடைந்துள்ளனர். அதன் பின்னர் சிறிது நேரத்தில் மீண்டும் 6.4 ரிக்டர் அளவில் மற்றொரு நிலநடுக்கமும் ஏற்பட்டது. ராணுவ ஆட்சி நடைபெற்று வரும் மியான்மரில் ஏற்பட்ட இந்த பேரிடர் மக்கள் மத்தியில் அதிர்ச்சியையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட இடிபாடுகளில் முதற்கட்டமாக சுமார் 100 பேர் பலியாகியுள்ளதாகத் தகவல் வெளியாகியது. மேலும் 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி இருந்தது. இந்நிலையில்இரண்டாவது நாளாக மீட்புப்பணிகள் நடைபெற்று வரும் நிலையில், இன்று (29/03/2025) காலை நிலவரப்படி மியான்மரில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 704 ஆக உயர்ந்துள்ளது. மேலும் காயமடைந்தோர் எண்ணிக்கை 2000 ஆக உயர்ந்துள்ளது.