இமாசல பிரதேசத்தின் சிம்லா மாவட்டத்தில் ராம்பூர் நகரில் விஷ்வ இந்து பரிஷத் அமைப்பினரால் தாகுர் சத்யநாராயணன் என்ற கோவில் நடத்தப்பட்டு வருகிறது. இந்த கோவில் வளாகத்திலேயே விஷ்வ இந்து பரிஷத் மற்றும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பினரின் மாவட்ட அலுவலகமும் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், இஸ்லாமிய ஜோடி ஒன்று இந்த கோவில் வளாகத்தில் திருமணம் செய்ய முடிவு செய்தது.
இந்நிகழ்ச்சியை காண, முஸ்லிம் மற்றும் இந்து சமூகத்தினர் ஒன்றாக திரண்டு வந்து இருந்தனர். இஸ்லாமிய திருமண நிகழ்வை நடத்தி வைக்கும் மவுலவி, சாட்சிகள் மற்றும் வழக்கறிஞர் ஒருவர் உள்ளிட்டோரும் திருமணத்திற்கு வந்திருந்தனர். இதுபற்றி கோவில் அறக்கட்டளையின் ராம்பூர் நகர பொது செயலாளரான வினய் சர்மா செய்தியாளர்களிடம் கூறும்போது, விஷ்வ இந்து பரிஷத் மற்றும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் முஸ்லிம்களுக்கு எதிரானவர்கள் என்ற குற்றச்சாட்டு அடிக்கடி கூறப்பட்டு வருகிறது.
ஆனால் தற்போது, இந்து கோவில் வளாகத்தில் இஸ்லாமிய ஜோடி ஒன்று திருமணம் செய்து கொண்டு உள்ளது. சனாதன தர்மம் எப்போதும், ஒவ்வொருவரையும் உள்ளடக்கிய, ஒவ்வொருவரும் முன்னோக்கி செல்ல வேண்டும் என்ற உந்துதலை ஏற்படுத்த கூடியது என்பதற்கான எடுத்துக்காட்டு இது என கூறியுள்ளார். இவர்களில் மணப்பெண், எம்.டெக் சிவில் என்ஜினீயர் படிப்பில் தங்க பதக்கம் வாங்கி உள்ளார். மணமகன் சிவில் என்ஜினீயராக உள்ளார். மணப்பெண்ணின் தந்தை மகேந்திர சிங் மாலிக் கூறும்போது, இந்த திருமண நிகழ்வை நடத்தி நகர மக்கள், அவர்கள் விஷ்வ இந்து பரிஷத் அமைப்போ அல்லது கோவில் அறக்கட்டளையாகவோ இருக்கட்டும், ஒரு நேர்மறையான மற்றும் துடிப்பான ஒத்துழைப்பை முன்னெடுத்து சென்று உள்ளனர். இதனால், ராம்பூர் நகர மக்கள், சகோதரத்துவம் பற்றிய செய்தியை கொண்டு சேர்த்து உள்ளனர் என கூறியுள்ளார். சமூகத்தில் மத நல்லிணக்கம் மற்றும் சகோதரத்துவம் பரவ வேண்டும் என்பதற்காக இந்து கோவில் வளாகத்தில் இஸ்லாமிய ஜோடியின் திருமணம் நடந்து உள்ளது. Related Tags :