திருச்சி, முசிறி அருகே தேவனூர் புதூர் கிராமத்தில் கிராம நிர்வாக அலுவலராக இருப்பவர் விஸ்வநாத் .
அதே கிராமத்தை சேர்ந்த செல்லதுரை என்பவர் தனது தந்தை ராமையா இறந்து போனதையடுத்து பட்டா பெயர் மாற்றம் செய்வதற்காக கிராம நிர்வாக அதிகாரியிடம் விண்ணப்பித்துள்ளார். பட்டா மாற்றம் செய்ய ரூபாய் 4 ஆயிரம் கிராம நிர்வாக அலுவலர் விஸ்வநாத் லஞ்சம் கேட்டுள்ளார். லஞ்சம் கொடுக்க விரும்பாத செல்லதுரை திருச்சி லஞ்ச ஒழிப்பு துறையில் புகார் செய்தார். இதையடுத்து கிராம நிர்வாக அலுவலர் விஸ்வநாத்திடம் மனுதாரர் செல்லதுரை லஞ்சம் கொடுத்த போது மறைந்திருந்த திருச்சி லஞ்ச ஒழிப்பு போலீஸ் டிஎஸ்பி மணிகண்டன் தலைமையிலான போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் பிரசன்ன வெங்கடேசன், பாலமுருகன், சக்திவேல் ஆகியோர் கிராம நிர்வாக அலுவலர் விஸ்வநாத்தை இன்று மதியம் அவரது அலுவலகத்தில் கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.