திருச்சி மாவட்டம் , முசிறி அருகே உள்ள கோணப்பம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் முரளி (51) உரக்கடை நடத்தி வந்தார். இவரது மகள் நிரஞ்சனா தா.பேட்டை சௌடாம்பிகா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார்.
நேற்று இரவு நிரஞ்சனாவின் தந்தை முரளி மாரடைப்பு காரணமாக இறந்து போனார். இந்நிலையில் இன்று பத்தாம் வகுப்பு அரசு தேர்வு நடைபெற உள்ள நிலையில் மாணவி நிரஞ்சனா தந்தையின் இழப்பை மனதளவில் ஏற்றுக் கொண்டு கண்ணீருடன் தா.பேட்டை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள தேர்வு மையத்திற்கு வந்தார்.
கடைசி தேர்வான சமூகஅறிவியல் தேர்வு எழுதுவதற்காக மாணவியின் உறவினருடன் விழி நிறைய கண்ணீருடன் மனதில் தேக்கிய சோகத்தை சுமந்து கொண்டு கைகளில் தேர்வுக்கு பேனா ஏந்தி வந்த மாணவி நிரஞ்சானாலின் நிலை கண்டு சக மாணவிகள் கண்கலங்கினர்.
மாணவி நிரஞ்சனாவிற்கு பள்ளி ஆசிரியர்களும் தேர்வு மைய மேற்பார்வையாளர் சிவானந்தம் ஆகியோரும் ஆறுதல் கூறி தேர்வை நல்ல முறையில் எழுதுமாறு ஆலோசனை வழங்கினர். தந்தையின் உடலுக்கு உறவினர்கள் வீட்டில் அஞ்சலி செலுத்தி வரும் நிலையில் மாணவி தந்தையை இழந்த துயரத்துடன் தேர்வு எழுதினார்.
தேர்வு முடிந்து வெளியே வந்த மாணவியை உறவினர்கள் அழைத்து சென்றனர்.