திருச்சி மாவட்டம் முசிறி அடுத்த வாளவந்தியை சேர்ந்தவர் பாலச்சந்திரன்(54), கூலித் தொழிலாளி. இவருக்கும் முசிறி அந்தரப்பட்டியை சேர்ந்த கீதா(46) என்பவருக்கும் பல வருடங்களாக கள்ளக்காதல் இருந்து வந்தது. அடிக்கடி இருவரும் சந்தித்து ஜாலியாக இருந்துள்ளனர்.
கீதா கணவருடன் ஏற்பட்ட தகராறு காரணமாக தனது குழந்தைகளுடன் தனியாக வாழ்ந்து வந்தார். இதனால் பாலசந்திரன் அடிக்கடி கீதா வீட்டுக்கு சென்று வந்தார். இந்த விவகாரம் ஊர் முழுவதும் தெரியவந்தது. இதுபற்றி கீதாவின் குழந்தைகளுக்கும் தெரிந்து உள்ளது. இதனால் குழந்தைகளே தாயை கண்டித்து உள்ளன. இதுபற்றி கீதா, பாலசந்திரனிடம் கூறி, இனி என் வீட்டுக்கு வராதே என கண்டித்து உள்ளார். ஆனால் பாலசந்திரன் அதை கேட்கவில்லை. இதனால் கள்ளக்காதலர்கள் இடையே சில நாட்களாக தகராறு ஏற்பட்டு உள்ளது. இதனால் கீதா, பாலசந்திரனிடம் பேசவில்லை.
இந்த நிலையில் நேற்று காலையில் பாலச்சந்திரன், வீட்டில் இருந்து அரிவாளை எடுத்துக்கொண்டு கீதா வீட்டுக்கு வந்தார். திடீரென அவர் அரிவாளை எடுத்து சரமாரியாக கீதாவை வெட்டித்தள்ளினார். ரத்த வெள்ளத்தில் சாய்ந்த கீதாவை முசிறி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர் இறந்து விட்டார்.
கள்ளக்காதலியை கொலை செய்த பின்னரும் பாலச்சந்திரனுக்கு கொலை வெறி அடங்கவில்லை. சுமார் 5 கி.மீ. தூரம் உள்ள வாளவந்திக்கு டூவீலரில் வந்தார். ரத்தம் சொட்ட சொட்ட அரிவாளையும் டூவீலரிலேயே வைத்திருந்தார்.
அங்கு வாளவந்தி திமுக முன்னாள் கிளை செயலாளர் ரமேஷ்(55) ஒரு டீக்கடை அருகே உட்கார்ந்திருந்தார். அவரையும் அதே அரிவாளால் வெட்டித்தள்ளினார். உயிருக்கு போராடிய ரமேசையும் முசிறி அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். அங்கு அவர் இறந்தார். 30 நிமிடத்தில் 2 பேரையும் தீர்த்து கட்டிய பாலச்சந்திரன் அரிவாளுடன் ஜம்புநாதபுரம் போலீசில் சரண் அடைந்தார். போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் ரமேஷ் ஊர் கோவில் நிலத்தை ஆக்ரமித்து தனது வீட்டின் வாசலை அமைத்திருந்தாராம். இதை அகற்றும்படி பாலச்சந்திரன் கூறிஉள்ளார். இதனால் அவர்களுக்குள்ளும் விரோதம் இருந்து வந்தது.
இந்த நிலையில் ஒரு கொலை செய்தாலும் சிறைதான், 2 கொலை செய்தாலும் சிறைதான் என கருதிய பாலசந்திரன் நம்மிடம் வம்பு செய்யும் ரமேசையும் தீர்த்துக்கட்டி விடுவோம் என முடிவு செய்து அவரைத்தேடி வாளவந்து வந்து உள்ளார். ரமேசின் கெட்டநேரம் அவரும் டீக்கடை அருகே அமர்ந்து இருந்தார். இதுதான் சரியான நேரம் என கருதிய பாலச்சந்திரன் , ரமேசையும் சரமாரி வெட்டிக் கொன்று உள்ளார்.
பாலசந்திரன் ஏற்கனவே கடந்த 2003ம் ஆண்டு அதே பகுதியில் நிலத்தகராறில் தாய், மகனை வெட்டிக்கொன்றார். அந்த இரட்டைக்கொலையில் சிறைக்கு சென்ற பாலசந்திரன், 15 ஆண்டுகள் சிறைத்தண்டனை முடிந்து 2018ல் தான் வெளியே வந்தார். 6வருடத்தில் மீண்டும் அதே பாணியில் இரட்டைக்கொலை செய்துவிட்டு சிறை சென்று உள்ளார். இந்த சம்பவம் முசிறியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.