திருச்சி மாவட்டம் முசிறி அருகே உள்ளது எம்ஐடி பாலிடெக்னிக் மற்றும் கலை அறிவியல் கல்லூரி, மற்றும் வேளாண் கல்லூரி. இந்த இரு கல்லூரிகளும் துறையூர் செல்லும் சாலையில் உள்ளது. இந்த கல்லூரியை சேலத்தை சேர்ந்த அதிமுக பிரமுகரான இளங்கோவன் என்பவர் நடத்தி வருகிறார். இவர் எடப்பாடி பழனிசாமிக்கு மிக நெருக்கமானவர். எடப்பாடி முதல்வராக இருந்தபோது இளங்கோவன் சேலம் மத்திய கூட்டுறவு வங்கி தலைவராகவும் இருந்தார்.
இவர் எடப்பாடிக்கு மிகவும் நெருக்கமானவர் என்பதால் இவரது வீட்டில் ஏற்கனவே லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தி உள்ளது. இந்த நிலையில் நேற்று மதியம் எம்ஐடி கல்லூரிக்கு 10க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் திடீரென வந்தனர். அவர்கள் திருச்சி, சென்னையில் இருந்து வந்துள்ளனர்.
அவர்கள் கல்லூரிக்கு வந்து சோதனை நடத்த தொடங்கினர். ஆனால் கல்லூரிகள் வழக்கம் போல நடந்து வருகிறது. இன்று 2ம் நாளாக சோதனை நடக்கிறது. இரண்டு கல்லூரிகளிலும் அலுவலகத்தில் உள்ள அத்தனை கணக்கு வழக்குகளையும், கம்ப்யூட்டர்களையும் அதிகாரிகள் ஆய்வு செய்து வருகிறார்கள். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.
எடப்பாடியின் வலதுகரம் என கூறப்படும் இளங்கோவன் கல்லூரியில் வருமான வரி ரெய்டும், ஓபிஎஸ்சின் வலதுகரம் என கூறப்படும் வைத்திலிங்கம் வீடுகளில் அமலாக்கத்துறை ரெய்டும் ஒரே நேரத்தில் நடப்பது அதிமுக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.