நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூர் குடித்தெருவை சேர்ந்தவர் கார் மெக்கானிக் வடிவேல்(41).
இவரது மனைவி கஜபிரியா (34), இவர்களது மகள் ஹரினிதா (11), மகன் விசாகன் (6). ஆவர். இவர்கள்
நால்வரும் ஒரு காரில் வடிவேல் அண்ணன் மகன் திருமணத்திற்காக பெரம்பலூருக்கு நேற்று மாலை சென்றுள்ளனர். காரை வடிவேல் ஓட்டியுள்ளார். கார் முசிறியில் இருந்து துறையூர் செல்லும் சாலையில் ஜம்புநாதபுரம் அருகே உள்ள டயர் கம்பெனி பகுதியில் சென்று கொண்டிருந்தபோது துறையூரில் இருந்து முசிறி நோக்கி கார் ஒன்று வந்துள்ளது. முசிறி நோக்கி வந்த காரில் முசிறி அருகே உள்ள வடுகபட்டி பகுதியைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்த வாலிபர்கள் ராஜ்குமார் (32), பிரதாப்(29), சுனில் குமார்(30),
ஆகிய மூவரும் வந்துள்ளனர். காரை ராஜ்குமார் ஓட்டியுள்ளார். இந்நிலையில் வடிவேல் ஒட்டி வந்த காரும்,
ராஜ்குமார் ஓட்டிச் சென்ற காரும் எதிர்பாராத விதமாக நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இதில் கடுகாயமடைந்த வடிவேல் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உடல் நசுங்கி இறந்து போனார். அப்பகுதி வழியே சென்றவர்கள் ஜெம்புநாதபுரம் காவல் நிலையத்திற்கு விபத்து குறித்து தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பொதுமக்கள் உதவியுடன் விபத்தில் சிக்கியவர்களை மீட்டு முசிறி அரசு மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் உதவியுடன் அனுப்பி வைத்தனர்.
சிகிச்சைக்கு செல்லும் வழியில் வடிவேல் மகள் ஹர்னிதா இறந்து போனார். முதல் உதவி சிகிச்சைக்கு பின் கஜபிரியா, விசாகன் ஆகிய இருவரும் நாமக்கல் தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். மற்றொரு காரில் வந்து விபத்துக்குள்ளாகி காயமடைந்த முசிறி வடுகபட்டியைச் சேர்ந்த ராஜ்குமார், பிரதாப், சுனில் குமார் ஆகியோர் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.விபத்தில் இறந்து போன தந்தை ,மகள் சடலம் முசிறி அரசு மருத்துவமனை வளாகத்தில் உள்ள பிரேத பரிசோதனை கூடத்திற்கு போலீஸாரால் அனுப்பி வைக்கப்பட்டது. விபத்து குறித்து ஜெம்புநாதபுரம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். சாலை விபத்தில் தந்தை மகள் பலியான சம்பவம் அப்பகுதியில் மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.