இந்திய இசை கலாச்சாரத்தை பாதுகாக்கும் அமைப்பின் (ஸ்பிக் மேகே) சார்பில் 9-வது சர்வதேச இசை மற்றும் கலாச்சார மாநாடு சென்னை ஐஐடியில் நேற்று தொடங்கியது.
திரிபுரா மாநில ஆளுநர் இந்திரசேனா ரெட்டிநல்லு மற்றும் எம்.பி.யும், இசையமைப்பாளருமான இளையராஜா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு மாநாட்டை தொடங்கி வைத்தனர். ஒரு வாரம் இந்த நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
விழாவில் சிறப்பு அம்சமாக சென்னை ஐஐடியில் ‘மேஸ்ட்ரோ இளையராஜா இசை பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம்’ அமைப்பதற்கான ஒப்பந்தம், சென்னை ஐஐடி மற்றும் இளையராஜா மியூசிக் மற்றும்மேனேஜ்மென்ட் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் இடையே கையெழுத்தானது.
விழாவில் இசையமைப்பாளர் இளையராஜா பேசும்போது, “
இசை என்றால் என்னவென்று சென்னைக்கு வந்தபோது எனக்கு தெரியாது. இசையை கற்றுக்கொள்வதற்காக வந்த நான், இன்றைக்கு மையம் ஒன்றை ஆரம்பித்து அனைவருக்கும் கற்றுகொடுக்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது. நான் இசையை கற்றுக்கொள்ளவில்லை. இசை எனது மூச்சாக மாறிவிட்டது.சென்னை ஐஐடியில் இருந்து 200இளையராஜாக்கள் உருவாக வேண்டும் என்பது எனது ஆசை” என்றார்.