தமிழகத்தின் பரவலாக அனைத்து மாவட்டங்களிலும் விளையக்கூடியது முருங்கை குறிப்பாக கரூர், திண்டுக்கல், தேனி, தூத்துக்குடி, திருப்பூர், அரியலூர் மற்றும் மதுரை மாவட்டங்களில் தீவிர சாகுபடியாக முருங்கை விவசாயம் நடைபெற்று வருகிறது. கரூர் மாவட்டத்தில் மட்டும் சுமார் 50,000 ஏக்கர் நிலங்களில், அரவக்குறிச்சி, க.பரமத்தி, ஈசநத்தம் உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில் முருங்கை சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இங்கு செடி முருங்கை, கொடி முருங்கை, கரும்பு முருங்கை உள்ளிட்ட ஆறு வகையான முருங்கைக்காய்கள் உற்பத்தி செய்யப்படுகிறது.
முருங்கை சாகுபடியின் போது நோய் தாக்கம் ஏற்பட்டால் முருங்கை உற்பத்தி பாதிப்பு ஏற்பட்டு முருங்கைக்காய் வரத்து குறைவாகும். அது போன்ற நேரங்களில் முருங்கைக்காய் ஒரு கிலோ 100 முதல் 120 ரூபாய் வரை விற்பனை ஆகிறது. தற்போது முருங்கைக்காய் வரத்து அதிகமாக உள்ளதால் ஒரு கிலோ முருங்கைக்காய் 15 முதல் 35 ரூபாய் வரை முருங்கைக்காய் ரகத்தை பொறுத்து விற்பனையாகிறது. இதனால், விவசாயிகளுக்கும் வியாபாரிகளுக்கும் வருவாய் பாதிப்பு ஏற்படுகிறது.
இந்நிலையில் இன்று தமிழக அரசு வேளாண் பட்ஜெட்டில் கரூர் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் உள்ளடக்கிய முருங்கை சாகுபடியை உயர்த்திட ரூபாய் 11 கோடி ஒதுக்கி உள்ளது.
இதுகுறித்து க. பரமத்தி சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த விவசாயி தட்சிணாமூர்த்தி தெரிவிக்கும் போது, தமிழக அரசு வேளாண் பட்ஜெட்டில் முருங்கை சாகுபடிக்காக 11 கோடி ஒதுக்கி உள்ளது வரவேற்கத்தக்கது என்றும், முருங்கை உற்பத்தியை பெருக்க அரசு முனைப்பு காட்டும் அதே வேளையில்,முருங்கை சாகுபடியில் உள்ள நோய் தாக்கங்கள் குறித்தும் தரமான முருங்கை தயார் செய்வது குறித்தும் வேளாண் அதிகாரிகள் மூலம் உரிய பயிற்சி அளித்தால் தரமான முருங்கை காய்கள் தயார் செய்து சந்தைப்படுத்த வாய்ப்பாக அமையும் என்றும், அதன் மூலம் நிரந்தர,அதிகப்படியான வருவாய் ஈட்டுவதற்கான வாய்ப்பு ஏற்படும் எனவும் தமிழக அரசு அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.
இதே போல முருங்கைக்காய்களை கொள்முதல் செய்து விற்பனை செய்து வரும் பொறியியல் பட்டதாரியான ஜான் தெரிவிக்கும் போது, கடந்த ஐந்தாறு வருடங்களாக தந்தை செய்து வரும் முருங்கைக்காய் வியாபாரத்தை தான் மேற்கொண்டு வருவதாகவும், தற்போது தமிழகத்தில் குறிப்பிட்ட சில மாவட்டங்களில் மட்டுமே தரமான முருங்கை உற்பத்தி நடைபெற்று வருவதாகவும், முருங்கை சாகுபடியில் நோய் தாக்கம் ஏற்பட்டபோது முருங்கைக்காய் வரத்து குறைவானால், சந்தையில் அதிகப்படியான விலைக்கு முருங்கைக்காய் விற்பதும், அதேசமயம் முருங்கைக்காய் வரத்து அதிகமானால் சந்தையில் முருங்கைக்காய் குறைவான விலைக்கு விற்பதும் நடைமுறையில் உள்ளது. இதனால் விவசாயிக்கும், வியாபாரிக்கும் பயனில்லாமல் போகிறது.
தற்போது தமிழக அரசு அதிகப்படியான முருங்கை சாகுபடிக்காக 11 கோடி ஒதுக்கி உள்ளது வரவேற்கத்தக்க ஒன்று தான் என்ற போதும், முருங்கை உற்பத்தியில் உள்ள பின்னடைவுகளை சீர் செய்து அதற்கான நடவடிக்கைகளை அரசு முனைப்பு காட்டுமேயானால் தரமான முருங்கைக்காய் உற்பத்தியில் முன்னிலை பெற முடியும். அதன் மூலம் தற்போது அண்டை மாநிலங்களுக்கு விற்பனை செய்து வரும் இந்த நடைமுறையை, அயல் நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யக்கூடிய ஒரு சூழலை உருவாக்க முடியும். அவ்வாறு தரமான முருங்கைக் காய்களை தயார் செய்வதற்கான வாய்ப்புகளை உருவாக்கும் போது, அதற்கான சந்தை வாய்ப்பை உறுதிப்படுத்துவதற்காக தரமான முருங்கைக்காய்க்கு புவிசார் குறியீடு அரசு பெற்று தர வேண்டும். கரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் தயாராகும் முருங்கைக்காய்க்கு உலகளாவிய வரவேற்பு உள்ளது என்ற சூழலை சரியாக பயன்படுத்தி தமிழக அரசு இதற்கான வாய்ப்புகளை உருவாக்கி தர வேண்டும் என்றார்.