பழனியில் அனைத்து உலக முத்தமிழ் முருகன் மாநாடு கோலாகலமாக நடைபெற்று வருகிறது. நேற்றைய தினம் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் வாழ்த்துரை வழங்கி மாநாட்டை துவக்கி வைத்தார் . மாநாட்டின் இரண்டாவது நாள் நிகழ்ச்சிகள் இன்று காலை 9 மணிக்கு துவங்குகிறது. மாநாட்டில் அமைச்சர் சக்கரபாணி, குமரகுருபர சுவாமிகள் மற்றும் வெளிநாட்டில் இருந்து வந்துள்ள பேச்சாளர்கள் சிறப்புரை ஆற்ற உள்ளனர். தொடர்ந்து பக்தி இசை கச்சேரி, பரதநாட்டியம், பட்டிமன்றம் என நிகழ்ச்சிகள் நடைபெற்றுவருகின்றன.
மாநாட்டில் பங்கேற்பதற்காக வெளிநாடுகளில் இருந்தும், உள்ளூரிலிருந்தும் ஏராளமான முருக பக்தர்கள் மாநாட்டு திடலுக்கு வந்த வண்ணம் உள்ளனர். மாநாட்டு திடலில் முருகனின் பெருமைகளை பறைசாற்றும் வகையில் அமைக்கப்பட்டுள்ள காட்சி அரங்கங்கள், கண்காட்சி பொதுமக்களை நிர்வாக கவர்ந்துள்ளது. கூட்டம் கூட்டமாக வரும் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து கண்காட்சியை பார்த்தவன் உள்ளனர். பொதுமக்கள் அதிக அளவு கண்காட்சியை பார்க்க கூடுவதால் கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் கண்காட்சி அரங்கு 30ஆம் தேதி வரை பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்படும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
இந்நிலையில் பழனியில் செய்தியாளர்களிடம் பேசிய இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, “வசைபாடுபவர்கள், வாழ்த்தும் வகையில் முத்தமிழ் முருகன் மாநாடு அமைந்துள்ளது. எதிர்ப்பையும் மீறி லட்சக்கணக்கானோர் மாநாட்டில் பங்கேற்றுள்ளனர். அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு மாபெரும் வெற்றி பெற்றுள்ளது. பல்வேறு கலை நிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெற்றுள்ளன. வெளி நாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கலந்துக் கொண்டுள்ளனர். பழனியை சுற்றிலும் அரோகரா கோஷம் கேட்டுக் கொண்டிருக்கிறது. பழனி மாநாட்டு கண்காட்சிகள் 5 நாட்கள் நீட்டிக்கப்படுகிறது. எல்லோருக்குமான அரசு இது. இந்து சமய அறநிலையத்துறை சார்பாக நடைபெறும் நிகழ்ச்சி இது. இந்து சமய அறநிலையத்துறைக்கு, மாநாட்டை நடத்தும் கடமை உள்ளது” என்றார்.