திருச்சி மேலகல்கண்டார் கோட்டையில் பாலமுருகன் கோவில் உள்ளது. மெயின்ரோட்டில் அமைந்துள்ள இந்த கோவில் 1968ம் ஆண்டு கட்டப்பட்டது. பழமையான முருகன்கோவில் என்பதால் பங்குனி உத்தரம் உள்ளிட்ட திருவிழாக்கள் மிகவும் விமர்சையாக நடக்கும். தினமும் காலை இக்கோவில் திறக்கப்பட்டு மாலையில் பூட்டப்படுவது வழக்கம். இன்று காலை வழக்கம் போல் கோவில் திறக்கப்பட்ட போது அங்குள்ள உண்டியல் உடைக்கப்பட்டு பணம் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது. அங்கிருந்த அம்மன் சிலை திருடப்பட்டு இருந்தது தெரியவந்தது. இன்று வெள்ளிக்கிழமை என்பதால் காலையில் கோவிலுக்கு வந்த பக்தர்கள் கோவிலில் திருட்டு சம்பவம் நடந்துள்ளதை அறிந்து அதிர்ச்சியடைந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக பொன்மலை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலகல்கண்டார்கோட்டை பகுதியில் சிறு சிறு திருட்டு
சம்பவங்கள் நடந்து வந்த நிலையில் மெயின்ரோட்டில் உள்ள கோவிலில் அம்மன்சிலை மற்றும் உண்டியல் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
