50 ஆண்டுக்கும் மேலாக முரசொலி நாழிதழை வழிநடத்திய எழுத்தாளரும், மூத்த பத்திரிக்கையாளருமான முரசொலி செல்வம்உடல்நலக்குறைவு காரணமாக பெங்களூரு மருத்துவமனையில் இன்று காலமானார். திமுகவின் கொள்கைகளை கடைக்கோடி தொண்டர்கள் வரை கொண்டு சேர்ப்பதற்காக கலைஞர் கருணாநிதியால் தொடங்கப்பட்ட முரசொலி நாளிதழின் நிர்வாக ஆசிரியராக பணியாற்றி வந்ததால், முரசொலி செல்வம் என்றே இவர் அறியப்பட்டார்.
முரசொலி செல்வம் மறைவையொட்டி, மின்துறை மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி விடுத்துள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது: முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் அன்பு மருமகனும், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி அவர்களின் மைத்துனரும், கலைஞரின் மனசாட்சி அய்யா முரசொலி மாறன் அவர்களின் அன்புச் சகோதரரும், முரசொலியை தனது மூச்சுக்காற்றாக கொண்டிருந்த அய்யா முரசொலி செல்வம் அவர்கள் மறைந்த செய்தி கேட்டு அதிர்ச்சியும் வருத்தமும் அடைந்தேன். காலத்திற்கும் அழியாத, இந்த கொள்கை வேந்தரின் கழகத்திற்கான பங்களிப்பையும் அவரது புகழையும் போற்றி வணங்குகிறேன் என்று இவ்வாறு தெரிவித்துள்ளார்.