கரூர் மாநகராட்சிக்குட்பட்ட திருக்காம்புலியூர் பகுதியில் இளங்கோ, பத்மாவதி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இன்று அவர் வீட்டிற்கு அருகில் உள்ள பொதுக் குழாயில் பத்மாவதி தண்ணீர் பிடிக்க சென்றுள்ளார். அதேபோல் பத்மாவதி வீட்டிற்கு எதிரே வசித்து வரும் கார்த்தி என்பவரின் மனைவியும், பொது குழாயில் தண்ணீர் பிடிக்க வந்துள்ளார். அப்பொழுது இருவருக்கும் வாய் தகராறு ஏற்பட்டு ஒருவரை ஒருவர் ஒருமையில் பேசி வாய் சண்டையில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த சண்டை குறித்து கார்த்தியின் மனைவி, கார்த்தியிடம் அழுது கொண்டே புகார் சொல்லியுள்ளார். இதனைக் கேட்டு கோபம் அடைந்த கார்த்தி, இளங்கோவின் வீட்டிற்கு சென்று தான் கொண்டு வந்திருந்த கசாப்பு கடை அரிவாளால் இளங்கோவையும், அவரது மனைவி பத்மாவதியும் வெட்டி விட்டு அங்கிருந்து தப்பியோடி விட்டார். இளங்கோவனுக்கு கையிலும், பத்மாவதிக்கு தலையில் பலமாக அரிவாள் வெட்டு விழுந்துள்ளது. அக்கம்பக்கத்தினர் அவர்களை மீட்டு அரசு மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர். இதில் பத்மாவதி பரிதாபமாக உயிரிழந்தார். இளங்கோவன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு கரூர் போலீசார் கொலை நடந்த இடத்தை பார்வையிட்டனர். மேலும், தப்பி ஓடிய கசாப்பு கடை உரிமையாளர் கார்த்தியை கைது செய்த போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். குறிப்பாக கரூர் மாநகர் பகுதியில் இந்த மாதத்தில் மட்டும் மூன்றாவது கொலைச் சம்பவம் நடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.