தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி, மலையாளம் உள்ளிட்ட பல்வேறு மொழி திரைப்படங்களில் நடித்து புகழ் பெற்றவர் நடிகர் பிரகாஷ் ராஜ். இவர் சமூக சீர்திருத்த கருத்துக்களை பொதுவெளியில் பேசுகவர். அத்துடன் முற்போக்கு சிந்தனை கருத்துக்களை உடையவர். இதனால் இவருக்கு ஒரு தரப்பினரிடம் இருந்து எதிர்ப்பும், மிரட்டலும் வந்து கொண்டு இருக்கிறது.
இந்த நிலையில், பெங்களூருவில் உள்ள அசோக்நகர் காவல் நிலையத்தில் நடிகர் பிரகாஷ் ராஜ் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில், ‘சனாதன தர்மம் குறித்து கருத்து தெரிவித்ததற்காக தன்னையும், தன் குடும்பத்தினரையும் யூடியூப்பில் அச்சுறுத்தும் வகையில் கொலைமிரட்டல் விடுத்து ஒருவர் பேசியுள்ளார். ஸ்டாலினையும், பிரகாஷ்ராஜையும் முடிக்க வேண்டுமா? இந்துக்கள் என்ன செய்ய வேண்டும்? உங்கள் ரத்தம் கொதிக்கவில்லையா? என அவர் வீடியோவில் பேசியுள்ளனர். எனவே, அவர் மீதும், அந்த யூடியூப் சேனல் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
இதையடுத்து சம்பந்தப்பட்ட யூடியூப் சேனல் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.