தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள சாக்கோட்டை அம்பேத்கர் நகரைச் சேர்ந்தவர் அன்பழகன். இவரது மகள் அன்பரசியை அதே தெருவைச் சேர்ந்த கார் டிரைவரான கருப்புசாமி என்பவர் காதலித்து வந்துள்ளார். இதையறிந்த அன்பழகன் கருப்புசாமியை கண்டித்துள்ளார். இந்நிலையில், காதலுக்கு அதே தெருவை பவுன்ராஜ் மகன் சுந்தரபாண்டியன்(36), உதவி செய்ததாக கூறப்படுகிறது.
இதனால், அன்பழகனுக்கும், பவுன்ராஜ் குடும்பத்திற்கும் முன்விரோதம் ஏற்பட்டது. இந்நிலையில், கடந்த 2017ம் ஆண்டு ஜனவரி 11ம் தேதி இரவு, பவுன்ராஜ் தனது மனைவி தமிழரசி, மகன்கள் சுந்தரபாண்டியன், மருதுபாண்டி,கார்த்தி ஆகியோருடன் வீட்டு வாசலில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர்.
அப்போது அன்பழகன் அவரது மகன்கள் அன்புநிதி, அறிவுநிதி, அருள்நிதி, அழகுநிதி ஆகியோர் சேர்ந்து, சுந்தரபாண்டியனை கத்தியால் குத்தி தாக்கினார். இதை தடுக்க சென்ற பவுன்ராஜ், கார்த்தி இருவரையும் தாக்கி விட்டு தப்பியோடி விட்டனர். இதில் பலத்த காயமடைந்த சுந்தரபாண்டியன் சம்பவ இடத்திலேயே இறந்தார்.
இது குறித்து நாச்சியார்கோவில் போலீசார் வழக்கு பதிவு செய்து, அன்பழகன்(60), அன்புநிதி32, அறிவுநிதி30, அருள்நிதி,28, அழகுநிதி,26, ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இவ்வழக்கு கும்பகோணம் மாவட்ட கூடுதல் அமர்வு விரைவு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. நீதிபதி ராதிகா விசாரித்து, சம்மபந்தபட்ட ஐந்து பேருக்கும் ஆயுள் தண்டனையும், தலா 13,750 ரூபாய் அபராதமும் விதித்து நேற்று தீர்ப்பளித்தார்.