தஞ்சை மாவட்டம் மல்லிப்பட்டினம் அரசு மேல்நிலைப்பள்ளி தமிழ் ஆசிரியை ரமணி நேற்று பள்ளியில் கொலை செய்யப்பட்டார்.இந்த வெறிச்செயலில் ஈடுபட்ட ரமணியின் முன்னாள் காதலன் மதன்குமாரை சேதுபாவா சத்திரம் போலீசார் கைது செய்தனர். நள்ளிரவு வரை அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.
பின்னர் அவரை நீதிபதி வீட்டில் ஆஜர்படுத்தினர். அவரை வரும் டிசம்பர் 3ம் தேதி வரை காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். அதைத்தொடர்ந்து மதன்குமாா் புதுக்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டார்.
ஆசிரியை கொலைசம்பவம் தொடர்பாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “தற்காலிக ஆசிரியை ரமணி கத்தியால் குத்தப்பட்டு உயிரிழந்த செய்தியறிந்து அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன். இவ்வழக்கின் விசாரணை தீவிரமாக கண்காணிக்கப்பட்டு, குற்றவாளிக்கு சட்டப்படி தண்டனை பெற்றுத்தரப்படும்.
ரமணியை இழந்து வாடும் குடும்பத்தினர், உறவினர்கள், சகஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு ஆழ்ந்த இரங்கல். அவரது குடும்பத்தினருக்கு முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.5 லட்சம் வழங்க உத்தரவிட்டுள்ளேன்” என்று கூறி இருந்தார்.
அதன்படி இன்று பட்டுக்கோட்டை தாலுகா அலுவலகத்தில், ரமணியின் தந்தை முத்துவிடம் ரூ.5 லட்சத்திற்கான காசோலையை உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி. செழியன் வழங்குகிறார்.