தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகில் கடந்த ஆண்டு நடந்த திருச்சினம்பூண்டியை சேர்ந்த ரவுடி வி. எஸ். எல். குமார் ( எ) முருகையன் கொலை வழக்கில் தேடப்பட்ட தி்ருச்சி பிரபல ரவுடி சாமி ரவி திருக்காட்டுப்பள்ளி போலீசில் சரணடைந்தார்.
சரணடைவதற்கு முன்பு செய்தியாளர்களிடம் சாமி ரவி கூறியதாவது: இந்த வழக்கிற்கும் எனக்கும் சம்பந்தம் கிடையாது. நான் தொடர்ந்து வழக்குகள் சம்பந்தமாக விசாரணைக்கு ஆஜராகி வருகிறேன். இப்பொழுது போலீசார் தீவிரமாக இருப்பதால் காவல் நிலையத்தில் சரணடைகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக இவர் தோகூர் போலீசில் சரண் அடைவதாக நேற்று மதியம் 3 மணி முதல் தகவல்கள் வந்து கொண்டே இருந்தன. இந் நிலையில் திடீரென இரவு 9 மணிக்கு மேல் திருக்காட்டுப்பள்ளி போலீசில் சாமி ரவி சரணடைந்தார்.
சென்னை, புதுக்கோட்டையில் போலீசார் என்கவுன்டர் செய்து 2 ரவுடிகளை கொன்றதால் வெளியில் தலைமறைவாக உள்ள ரவுடிகள் இப்போது கிலி பிடித்து போலீசில் சரண் அடைகிறார்கள்.