கடலூர் மாவட்டம், விருத்தாசலத்தை அடுத்த குப்பநத்தம் புதுக்காலனியைச் சேர்ந்த சாமிக்கண்ணு என்பவரது மகன் முருகேசன். பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த முருகேசனுக்கும், புதுக்கூர்பேட்டை பகுதியில் மாற்று சமூகத்தைச் சேர்ந்தவரான துரைசாமியின் மகள் கண்ணகிக்கும் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் படிக்கும்போது காதல் மலர்ந்தது. அதையடுத்து கடந்த 05.05.2003 அன்று இருவரும் கடலூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் பதிவுத் திருமணம் செய்துகொண்டு அவரவர் வீட்டில் தனித்தனியாக வசித்து வந்தனர்.
இந்த விவகாரம் வெளியில் தெரிந்த நிலையில் கண்ணகியை அவரது குடும்பத்தினர் விழுப்புரத்திலுள்ள உறவினர் வீட்டில் விட்டுவிட்டு வந்தனர். எனினும், இத்திருமணத்தினால் தங்களது கௌரவம் பாதிக்கப்பட்டதாக உணர்ந்த பெண்ணின் பெற்றோர் 8.7.2003 அன்று வண்ணாங்குடிகாட்டிலுள்ள மயானத்தில் முருகேசன்-கண்ணகி ஆகியோரது வாய், காதில் விஷத்தை ஊற்றி கொலை செய்து பின்னர் உடலை தனித்தனியாக எரித்தனர். இந்த கொடூர சம்பவம் குறித்து முருகேசனின் பெற்றோர்கள் விருத்தாசலம் காவல்நிலையத்தில் கூறியபோது, அது தற்கொலை என்று கூறி அந்த புகாரை ஏற்காமல் திருப்பியனுப்பப்பட்டனர்.
இதையடுத்து சில நாள்களுக்குப் பிறகு இந்தச் சம்பவம் ஊடகங்களில் வெளியானது. அதன்பின்னர் விருத்தாசலம் போலீசார் இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்தனர். அதில் முருகேசன், கண்ணகி ஆகியோர் சாதி மாறி திருமணம் செய்ததால் அவரவர் தரப்பினர் தங்களது பிள்ளைகளை கொலை செய்ததாகக் கூறி இரு தரப்பிலிருந்தும் தலா 4 பேரை கைது செய்தனர். ஆனால் இந்தக் கொலைகள் சாதி ஆணவத்தில் நடத்தப்பட்டது என்றும், எனவே வழக்கை சிபிஐ வசம் ஒப்படைக்க வேண்டுமென பல்வேறு அமைப்புகள் வலியுறுத்தின. இதனையடுத்து இந்த வழக்கு சிபிஐ விசாரணைக்கு 2004ம் ஆண்டு மாற்றப்பட்டது. அதே ஆண்டில் சிபிஐ குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது.
அதில், அப்போதைய விருத்தாசலம் போலீஸ் இன்ஸ்பெக்டர், சப் இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட 15 பேரை வழக்கில் குற்றவாளிகளாகச் சேர்த்தது. கண்ணகி, முருகேசன் ஆணவக்கொலை வழக்கில் 13 பேர் குற்றவாளிகள் என கடலூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. கண்ணகியின் சகோதரர் மருது பாண்டிக்கு தூக்கு தண்டனையும், இந்த வழக்கில் நடவடிக்கை எடுக்காத போலீஸ் இன்ஸ்பெக்டர், சப் இன்ஸ்பெகடர் உள்பட 12 பேருக்கு ஆயுள் தண்டனையும் வழங்கி உத்தரவிட்டது. 2 பேர் விடுதலை செய்யப்பட்டனர். இந்த தீர்ப்பை எதிர்த்து 13 பேரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். அந்த வழக்கில் கண்ணகி அண்ணனுக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
மேலும் கண்ணகியின் தந்தை, காவல்துறை கண்காணிப்பாளர், காவல் ஆய்வாளர் உள்பட 12 பேருக்கு அளிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை சென்னை உயர்நீதிமன்றம் உறுதி செய்தது. இதனையடுத்து, இந்த தண்டனையை எதிர்த்து குற்றவாளிகளான கந்தவேல், ஜோதி, மணி ஆகியோர் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர்.
இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், சென்னை உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பை உறுதி செய்து உத்தரவிட்டுள்ளது. மேலும் குற்றவாளிகளான கந்தவேல், ஜோதி, மணி ஆகியோரின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து தீர்ப்பு வழங்கியது. கடலூரில் 22 ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்தையே உலுக்கிய முருகேசன்-கண்ணகி ஆணவக் கொலை வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது.
Share 0