அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே உள்ள கருக்கை கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜமாணிக்கம்(70). இவரது தம்பி சிங்காரவேல்(60). இவர்களது நிலத்தை இருவரும் தனித்தனியாக விவசாயம் செய்து வந்தனர். இருவருக்கும் நிலம் சம்பந்தமாக நீண்ட நாட்களாக முன்விரோதம் இருந்து வந்தது.
இந்நிலையில், கடந்த 2020-ம் ஆண்டு ராஜமாணிக்கமும், அவரது மனைவி மலர்விழியும் தங்களது வயலில் வேலை செய்து கொண்டிருந்தபோது, சிங்காரவேல் மற்றும் அவரது மகன்கள் பழனிவேல்(30), முருகவேல்(25) ஆகிய மூவரும் ராஜமாணிக்கத்தையும் அவரது மனைவி மலர்விழியையும் திட்டி, தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.
இது குறித்து தகவலறிந்து ராஜமாணிக்கத்தின் மகன் தேவராஜன்(40) தனது சித்தப்பா சிங்காரவேலுவிடம் முறையிட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சிங்காரவேலு மற்றும் அவரது மகன்கள் பழனிவேல், முருகவேல் ஆகியோர் கத்தியால் தேவராஜனை குத்தி கொலை செய்தனர்.
இது தொடர்பான புகாரின் பேரில் 3 பேரையும் ஆண்டிமடம் போலீஸார் கைது செய்தனர்.இந்த வழக்கு அரியலூர் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதி கிறிஸ்டோபர், குற்றவாளிகளான சிங்காரவேலு, பழனிவேல் மற்றும் முருகவேல் ஆகிய மூவருக்கும் ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பளித்தார். மேலும், மூவருக்கும் தலா ரூ.5,000 அபராதம் விதித்தார். அபராதம் கட்ட தவறினால் மேலும் ஓராண்டு சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.