கோவையில் கிரிக்கெட் விளையாட்டில் ஏற்பட்ட தகராறில் இளைஞரை கொலை செய்த வழக்கில் 10 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனையும், இருவருக்கு ஆயுள் தண்டனையும் விதித்து கோவை எஸ்சி, எஸ்டி சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கோவை ரத்தினபுரி பகுதியைச் சேர்ந்தவர் தாமரைச்செல்வன். பட்டியலினத்தைச் சேர்ந்த இவர், கடந்த 2016-ல் கிரிக்கெட் விளையாடியபோது ஏற்பட்ட தகராறில் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக ரத்தினபுரி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விக்கி, கார்த்தி, மகேந்திரன், சுரேஷ், கவாஸ்கான், ஜெய்சிங் நந்து நவீன், கருப்பு கௌதம், விமல்குமார், விஜய், சைமன் கிறிஸ்டோபர், கௌதம் மற்றும் கலைவாணன் ஆகிய 14 பேரை கைது செய்தனர்.
இந்த வழக்கு கோவை எஸ்சி, எஸ்டி சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இதனிடையே, வழக்கு விசாரணையின் போது ஜெய்சிங் உயிரிழந்தார். விஜய் என்பவர் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டார். இந்த நிலையில் இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த நீதிபதி விவேகானந்தன், கருப்பு கௌதம் மற்றும் சைமன் கிறிஸ்டோபர் ஆகியோருக்கு ஆயுள் தண்டனையும், தலா ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார். எஞ்சிய 10 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து உத்தரவிட்டார். இவ்வழக்கில் அரசு தரப்பில் வழக்கறிஞர் பாலசுப்பிரமணி ஆஜரானார்.