கர்நாடக மாநிலம் பெங்களூரு கோரமங்களாவில் உள்ள பெண்கள் தங்கும் விடுதியில், பீகாரைச் சேர்ந்த 24 வயது இளம் பெண் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தேடப்பட்ட நபர் இன்று (சனிக்கிழமை) மத்தியப் பிரதேசத்தில் கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்டவர் அபிஷேக் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. இவர் கடந்த ஜூலை 23-ம் தேதி இரவு இளம்பெண் கீர்த்தி குமாரியை கொடூரமாக தாக்கி கழுத்தை அறுத்துக் கொலை செய்துவிட்டு, மத்தியப் பிரதேசத்துக்கு தப்பிச் சென்றுள்ளார். கொலைக்கான காரணம் குறித்து அபிஷேக்கிடம் பெங்களூருவில் வைத்து விசாரணை நடத்தப்பட்டது. தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வந்த கொலை செய்யப்பட்ட கீர்த்தி குமாரி, தாக்குதல் நடத்தியவருடைய காதலியுடன் பணி புரிந்தவர்.
கொலை சம்பவம் குறித்து போலீஸார் கூறுகையில், “சம்பவம் நடந்த விடுத்திக்குள் செவ்வாய்க்கிழமை (ஜூலை 23) இரவு 11.30 மணிக்கு நுழைந்த குற்றவாளி, மூன்றாவது மாடியில் உள்ள கீர்த்தியின் அறைக்கு அருகே அவரின் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார். இந்தத் தாக்குதலில் அப்பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பெண்ணின் உடலில் பலகத்திக் குத்து காயங்கள் இருந்தன” என்று தெரிவித்தனர்.
இக்கொடூர சம்பவம் குறித்து வெளியான கண்காணிப்பு கேமிரா காட்சிகளில், குற்றவாளி பெண்கள் விடுதியில் உள்ள கீர்த்தியின் அறைக்குச் சென்று கதவைத் தட்டுகிறான். அப்பெண் கதவினைத் திறந்ததும் அவரை வெளியே இழுத்து குற்றவாளி கடுமையாக கத்தியால் தாக்குகிறான்.
தாக்குதலில் இருந்து தப்பிக்க அப்பெண் போராடினாலும், தன் முயற்சியில் அவர் தோல்வியடைந்தார். அவரை கொலை செய்துவிட்டு குற்றவாளி அங்கிருந்து தப்பிச் செல்வது பதிவாகியுள்ளது.
போலீஸாரின் முதல்கட்ட விசாரணையில் இந்தக் கொலையைச் செய்தது தெரிந்த நபர்தான் என்பது தெரியவந்தது. தங்கும் விடுதியின் உரிமையாளரின் அலட்சியமே இந்தக் கொலைக்கு காரணம் என்று போலீஸார் குற்றம்சாட்டியிருந்தனர். இந்த கொலை தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீஸார் குற்றவாளியைப் பிடிக்க தனிப்படை அமைத்திருந்தனர்.