தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் தாலுகா பந்தநல்லூர் அருகே நெய்குன்னம் பகுதியை சேர்ந்த நல்லதம்பி என்பவரின் மகன் கலைவாணன் (30). பைனான்சியர் மற்றும் விவசாயம் செய்து வந்தார். இவர் ஜெயங்கொண்டம் எம்எல்ஏ கண்ணனின் உறவினர். திமுகவில் ஒன்றிய இளைஞர் அணி துணை அமைப்பாளராகவும் இருந்து வந்தார். இந்த நிலையில் கடந்த 12-ந் தேதி இரவு வயலுக்கு தண்ணீர் பாய்ச்ச செல்வதாக கூறிவிட்டு சென்றார். வெகுநேரமாகியும் அவர் வீட்டுக்கு திரும்பி வரவில்லை. உறவினர்கள் தேடி வந்து பார்த்த போது ரத்த வெள்ளத்தில் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.
இதுகுறித்து பந்தநல்லூர் போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் கலைவாணனுக்கும் அந்த பகுதியை சோ்ந்த சிலருக்கும் முன்விரோதம் இருந்து வந்ததாகவும் அதனால் கொலை நடந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்பட்டது. மேலும் பைனான்சியர் என்பதால் கொடுக்கல் வாங்கல் பிரச்சனையால் கொலை நடந்திருக்கலாமோ என்ற சந்தேகத்திலும் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
மேலும் கலைவாணன் செல்போன் காணாமல் போய் இருந்ததால் தொழில்நுட்ப உதவியுடன் கலைவாணன் யார் யாரிடம் பேசியுள்ளார் என்பது பற்றி போலீசார் விசாரணை நடத்தினர். அதில் கலைவாணனின் பெரியப்பா மகனான அருண் பாண்டியனிடம் (32) வயலுக்கு செல்வதற்கு முன்பு பேசியுள்ளார். இதனால் போலீசாரின் சந்தேகம் அருண்பாண்டியன் மீது திரும்பி உள்ளது.
அதனை தொடர்ந்து அருண்பாண்டியனிடம் போலீசார் நடத்திய விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது. அதில் அருண்பாண்டியன் தனது நிதி தேவைக்காக கலைவாணனை பயன்படுத்தியுள்ளார். அதன்படி பல்வேறு செலவுகளுக்கு என்று ரூ.25 லட்சம் வரை தனது வீட்டிற்கு தெரியாமல் கலைவாணனிடம் வாங்கியுள்ளார். அதிக தொகை பணம் கொடுத்துள்ளதால் அதனை கலைவாணன் திருப்பி கொடுக்கும்படி பலமுறை அருண்பாண்டியனிடம் கேட்டுள்ளார்.
அதற்கு அவர் பின்னர் தருவதாகவும், கலைவாணனிடம் வேலை பார்த்து கழித்து கொள்வதாகவும் கூறியதாக கூறப்படுகிறது. இதனால் இருவரும் பல்வேறு இடங்களில் பணத்தை வசூல் செய்ய சென்று வந்துள்ளனர். இருப்பினும் கலைவாணன் விடாமல் தனது பணத்தை கேட்டுள்ளார். இந்த நிலையில் தன்னிடம் பணம் கேட்பதை மறக்க செய்வதற்காக கலைவாணனின் வைக்கோபோரை தொடா்ந்து 2 முறை தீவைத்து எரித்துள்ளார். அப்போது கவனம் திசை திரும்பினாலும் கலைவாணன் பணம் குறித்து தொடர்ந்து அருண்பாண்டியனிடம் கேட்டுள்ளார். இந்த நிலையில் கடந்த மார்ச் மாதம் அதே பகுதியை சேர்ந்த ஒருவர் கலைவாணனின் வைக்கோல்போரை முன்விரோதம் காரணமாக தீயிட்டு எரித்துவிட்டு தொடரும் என்று சுவரில் எழுதி சென்றுள்ளனர்.
இதனை தனக்கு சாதகமாக பயன்படுத்தி கொண்ட அருண்பாண்டியன் பணம் குறித்து கேட்காமல் இருப்பதற்காக கலைவாணன் கொலை செய்யப்படுவதற்கு சில நாட்கள் முன்பாக துண்டு சீட்டில் கொலை மிரட்டல் விடுத்து போட்டுள்ளார். இதற்கிடையில் பணம் கொடுப்பது தாமதம் ஆனால் பணத்தை திருப்பி கொடுக்காவிட்டால் வீட்டில் தெரிவித்து விடுவேன் என்று கலைவாணன் கூறியதாக தெரிகிறது. இதனால் அவரை தீர்த்துகட்ட அருண்பாண்டியன் முடிவு செய்துள்ளார்.
அதன்படி கடந்த 12-ந் தேதி இரவு வயலுக்கு தண்ணீர் பாய்ச்ச வருமாறு கூறியுள்ளார். இதனால் வீட்டில் இருந்து சுமார் 8 மணிக்கு வயலுக்கு சென்றுள்ளார். அங்கு ஏற்கனவே அருண்பாண்டியன் மதுபாட்டில்களுடன் இருந்துள்ளார். வயலில் வைத்து இருவரும் மது அருந்தியுள்ளனர். அப்போது அருண்பாண்டியன், கலைவாணனுக்கு அளவுக்கு அதிகமாக மதுவை கொடுத்துள்ளார். இதனால் ஏற்பட்ட போதையில் அவர் வயலிலேயே படுத்துவிட்டார். அப்போது தான் மறைத்த வைத்திருந்த அரிவாளை எடுத்து கலைவாணனை சரிமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து அவசர அவசரமாக தப்பி சென்றுவிட்டார். கொலைக்கு பயன்படுத்திய அரிவாளை அருகில் இருந்த ஒரு வயலில் வீசிவிட்டு சென்றுள்ளார்.
பின்னர் மறுநாள் காலையில் ஒன்றும் தெரியாதது போல் நாடகமாடிய இவர் போலீசாரின் கிடுக்கிப்பிடி விசாரணையில் சிக்கி கொண்டது தெரியவந்தது. ஆரம்பத்தில் இருந்தே போலீசாரின் கவனம் தன் மீது வரக்கூடாது என்பதற்காக பல்வேறு வகையிலும் திசை திருப்பி நாடகம் ஆடியுள்ளார். ஏற்கனவே வைக்கோல்போர் எரிக்கப்பட்டது, துண்டு சீட்டில் கொலை மிரட்டல் ஆகியவற்றை போலீசில் புகார் செய்தும் நடவடிக்கை இல்லை. அதனால் என் தம்பி உயிர் பலியாகி விட்டது என்று அழுது கொண்டே பேட்டியும் கொடுத்து இருந்தார் அருண்பாண்டியன் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இருப்பினும் வலுவான ஆதாரங்களை சேகரித்த போலீசார் கொலை நடந்த 5 நாட்களுக்குள் அருண்பாண்டியன் தான் கொலையாளி என்று கண்டுபிடித்து கைது செய்து திருவிடைமருதூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.