தமிதுக கவர்னர் ரவி, பாஜக தலைவர் போல தினமும் திமுக ஆட்சிக்கு எதிராகவும், தமிழக மக்களின் கலாச்சாரத்திற்கு எதிராகவும், தமிழை பாராட்டுவது போல தமிழை மட்டம் தட்டும் போக்கிலும் செயல்பட்டுக்கொண்டிருக்கிறார் என ஒட்டு மொத்த தமிழக மக்களும் ரவி மீது குற்றம் சாட்டுவதுடன், உடனடியாக அவரை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் எனவும் வலியுறுத்தி வருகிறார்கள்.
இந்த நிலையில் கவர்னர் ரவியின் போக்கை கண்டித்து முரசொலியில் எழுதப்பட்டுள்ள கட்டுரையில் கூறியிருப்பதாவது:
ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு தைரியம் இருந்தால் நேருக்கு நேராக அரசியல் களத்துக்கு வந்து மோதட்டும். அதைவிட்டு ஆளுநர் பதவிக்குள் பதுங்கிக் கொண்டு அரசியல் செய்ய முனையக் கூடாது. ஜாகையை கமலாலயத்திற்கு மாற்றிக் கொண்டு களத்துக்கு வரட்டும். அப்போது முழுமையாக வைத்துக் கொள்ளலாம் கச்சேரியை!
ஒரு நியமனப் பதவியில் உட்கார்ந்து கொண்டு தினமும் அவர் செய்து கொண்டு வரும் குடைச்சல்கள் சகிக்க முடியாதவையாக இருக்கின்றன. அவர் ஏதோ இந்திய நாட்டின் குடியரசுத் தலைவரைப் போலவோ அல்லது இந்திய மன்னரைப் போலவோ மனதுக்குள் நினைத்துக் கொள்கிறார்.
பல்கலைக்கழகத் துணைவேந்தர்களைக் கூட்டி வைத்துக்கொண்டு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதைப் பற்றி பேசி இருக்கிறார் ஆளுநர். துணைவேந்தர்களிடம் என்ன பேச வேண்டும், தொழிலதிபர்களிடம் என்ன பேச வேண்டும் என்ற அடிப்படை கூடவா தெரியவில்லை?
ஆளுநர் பதவி என்பது ஒன்றியத் தலைமையால் தற்காலிகமாக கொண்டு வந்து வைக்கப்படும் குரோட்டன்ஸ் தொட்டி. தொட்டி, தோப்பாகாது.
இவ்வாறு முரசொலி கூறி உள்ளது.