விழுப்புரத்தில் நடந்த சிபிஎம்மின் மாநில மாநாட்டுக் கூட்டத்தில் பேசிய மாநில செயலாளர் பாலகிருஷ்ணன்., ‘தமிழகத்தில் எந்த ஒரு போராட்டத்திற்கும் அனுமதி தருவதில்லை, என்ன போராட்டம் நடத்தினாலும் வழக்கு போடுகிறார்கள். மீண்டும் அறிவிக்கப்படாத அவசர நிலையை பிரகடனபடுத்துவீர்களா நீங்கள்?’ என முதல்வர் ஸ்டாலின் பெயரை குறிப்பிட்டு நேரடியாக கேள்வி எழுப்பினார். பாலகிருஷ்ணனின் இந்த பேச்சு அரசியல் அரங்கில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இத்தகைய சூழ்நிலையில், மார்க்சிஸ்ட் கட்சியை விமர்சிக்கும் வகையில், தி.மு.க.,வின் அதிகாரப்பூர்வ நாளிதழான முரசொலியில் முதல் பக்கத்தில் கட்டுரை வெளியாகி உள்ளது. ‘இது தோழமைக்கு இலக்கணம் அல்ல’ என்ற தலைப்பில் வெளியாகியுள்ள அந்த கட்டுரையில்.. மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் விழுப்புரத்தில் பேசிய பேச்சு தோழமைக்கான இலக்கணமாக இல்லை. தமிழகத்தில் அவசர நிலைப் பிரகடனமா? என்று கே.பாலகிருஷ்ணன் பேசிய பேச்சுக்கு ‘தினமலர்’ கொடுத்த முக்கியத்துவத்தைப் பார்க்கும் போதே, தி.மு.க. ஆட்சிக்கு எதிரான சதி கூட்டத்துக்கு தீனி போடத்தொடங்கி இருக்கிறார் கே.பி. என்பது தெளிவாகத் தெரிகிறது.
‘முதல்வரை இந்த மாநாட்டின் வாயிலாகக் கேட்கிறேன். தமிழகத்தில் அறிவிக்கப்படாத அவசர நிலையைப் பிரகடனப் படுத்தியுள்ளீர்களா?’ என்று கேட்டிருக்கிறார் கே.பி. அவரை பேசவிடாமல் தடுத்துள்ளார்களா? இல்லை! பல்லாயிரக்கணக்கான மக்கள் கூட்டத்தில் நின்று கொண்டுதான் அவரே பேசுகிறார். அவசர நிலை என்றால் என்ன என்றே தெரியாத நிலையிலா அவர் இருக்கிறார்? முதல்வரை எப்போதும் தொடர்புகொள்ளும் நிலையில் இருக்கும் அவர் விழுப்புரத்தில் எதற்காக வீதியில் போய் நின்று இப்படிக் கேட்க வேண்டும்? எப்போதும் நட்போடும். எந்த நேரத்திலும் தோழமையுடனும் பொது இடங்கள் அனைத்திலும் மதிப்பளித்தும், உரிய வகையில் அனைத்துக்கும் பதிலளித்தும் செயல்படும் முதல்வர் ஸ்டாலினை எப்போதும் சீண்டிப் பார்க்க வேண்டும் என்ற நெருக்கடியும் நிர்பந்தமும் கே.பி.க்கு இருக்கலாம். ஆனால் தோழமைக் கட்சிகளிடம் சிறு விண்ணப்பம் வந்தாலும் அதற்கு உரிய மதிப்பளிக்கும் இயக்கம் தான் தி.மு.க., என்பதை வஞ்சம் இல்லாத தோழர்கள் உணர்வார்கள். தமிழகத்தில் போராட்டமோ, ஆர்ப்பாட்டமோ நடத்தப்படவில்லையா? நடக்கவே இல்லையா? ‘தீக்கதிர்’ நாளிதழை ஒழுங்காகப் படிக்கும் யாரும் இதனை ஒப்புக்கொள்ள மாட்டார்கள். கே.பாலகிருஷ்ணன் ஆறு நாட்களுக்கு முன்னால் தான் எழுதிய அறிக்கையை அவரே முழுமையாக முதலில் படிக்க வேண்டும். டிசம்பர் 28ம் தேதியிட்ட ‘தீக்கதிர்’ நாளிதழிலில் வியூகம் வகுக்க விழுப்புரத்தில் சங்கமிப்போம்’ என்று இதே பாலகிருஷ்ணன் 29 பிரிவுகளாக கருத்துகளைச் சொல்லி இருக்கிறார். தமிழகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நடைபெற்ற பல்வேறு போராட்டங்களைப் பட்டியலிட்டுள்ளார். புதிய பொருளாதாரக் கொள்கை, மதவெறி, ஆளுநருக்கு எதிர்ப்பு, மாநில உரிமைகள், மனித உரிமை, கருத்துச் சுதந்திரம், ஜாதிய ஒடுக்கு முறை, தீண்டாமைக் கொடுமைகள், பெண்கள் குழந்தைகள் மீதான வன்முறை, சிறுபான்மையினர் மீதான வன்முறை, வீடுகளை அப்புறப் படுத்துதல், வாழ்விடப் பிரச்னைகள், வீட்டு மனைப் பட்டா, கள்ளக்குறிச்சி ஸ்ரீமதி மரணம், பெரம்பலூர் சிறுமி தற்கொலை, விழுப்புரம் பாலியல் கொடுமைகள், வேங்கை வயல், நாங்குநேரி மாணவன் தாக்குதல், விழுப்புரம் கோவில், சங்கராபுரம் பிரச்னை, திருவண்ணா மலை மாரியம்மன் கோவில், சேலம் பெரிய மாரியம்மன் கோவில் நுழைவு ஆகிய போராட்டங்களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் நடத்தியதாக பாலகிருஷ்ணன் மார்தட்டிக் கொள்கிறார். பின்னர், அவரே போராட்டம் நடத்த உரிமை இல்லையா என்றும் கேட்கிறார். இதில் எது ஒரிஜினல் கே.பி.?
இந்தப் போராட்டங்களை தமிழகத்தில் மார்க்சிஸ்ட் கட்சி நடத்தியது உண்மையானால் இந்தப் போராட்டங்களுக்கு அனுமதி அளித்தது எந்த முதல்வர்? இவர் கேள்வி கேட்கிறாரே அதே முதல்வர் தானே அனுமதியும் கொடுத்தார்? அவசர நிலைக் காலத்தில் ஒரு கட்சி இத்தனை போராட்டங்களை நடத்தி இருக்க முடியுமா? கூட்டணிக் கட்சி என்பதற்காக போராட்டமே நடத்தக் கூடாது என்று சொல்லவில்லை. ஆனால் போராட்டமும் நடத்திவிட்டு, போராட்டம் நடத்த அனுமதிப்பது இல்லை என்று சொல்வது கூட்டணி அறமும் அல்ல, அரசியல் அறமும் அல்ல. மனச்சாட்சிக்கும் அறமல்ல. தன் நெஞ்சே தன்னைச் சுடாதா? சென்னையில் ஒரு மாணவி மீது நடத்தப்பட்ட பாலியல் வன்கொடுமையை மையப்படுத்தி, ‘தமிழகத்தில் மாணவிகளுக்குப் பாதுகாப்பே இல்லை’ என்று ‘ட்ரெண்ட்’ உருவாக்கத் துடிக்கிறார்கள் சிலர். அதற்காகப் போராட்டம் என்ற பெயரால் குழப்பம் ஏற்படுத்தப் பார்க்கிறார்கள். அவர்களுக்கும் சேர்த்து எதற்காக வக்கீலாக மாறுகிறார் பாலகிருஷ்ணன்? அப்படிக் காட்ட வேண்டிய அவசியம் என்ன வந்தது? தமிழகத்தில் பட்டியலின அடக்குமுறை அதிகமாக உள்ளது. ஆணவக் கொலைகள் அதிகமாக நடக்கிறது. ஈ.வெ.ரா., கொள்கைகள் திராவிட இயக்க ஆட்சிகளில் நீர்த்துப் போய்விட்டது. நாட்டில் அவசர நிலைப் பிரகடனம், போலீஸ் துறை கட்டுப்பாடு இல்லாமல் செயல்படுகிறது இப்படி பொத்தாம் பொதுவாக வாய்க்கு வந்ததை பாலகிருஷ்ணன் சொல்வதற்குக் கிடைக்கும் முக்கியத்துவம் என்பது அந்தக் குற்றச்சாட்டுகளுக்கான அழுத்தம் அல்ல. கூட்டணியில் இருப்பதால் கிடைக்கும்’ வெளிச்சங்கள் மட்டுமே. இதற்கு தி.மு.க. சார்பில் வரிக்கு வரி பதிலளிப்பது இல்லை. விமர்சிப்பதற்கான உரிமை அவருக்கு இருக்கிறது. அப்படி பதில் அளிக்காமல் இருப்பதையே பலவீனமாக நினைத்துவிட்டார்கள் போலும்!
எதிரிக்கட்சியாக நடந்து கொண்டு எடுத்தெறிந்து பேசினால் தான் கவனம் கிடைக்கும் என்ற கிடைக்கும் என்ற நோக்கத்தோடு அளிக்கப்படும் பேட்டிகளும் பேச்சுகளும் மீடியாக்களின் மூலமாக ஏற்படுத்தும் பின் விளைவுகளைப் பற்றிக் கவலைப்படாமல் கருத்துச் சொல்லிக் கொண்டு போவது தோழமைக்கான இலக்கணம் அல்ல. தோழமையைச் சிதைக்கும் என்பதை பல்லாண்டு அனுபவம் கொண்ட தோழர் உணராமல் இருப்பதே வருத்தமளிக்கிறது. விழுப்புரம் மாநாட்டில் கே.பாலகிருஷ்ணன் வெளிச்ச விதைகளை விதைக்கவில்லை. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.