உ.பி. மாநிலம் லக்னோவில் இருந்து மும்பைக்கு புஷ்பக் எக்ஸ்பிரஸ் ரயில், நேற்று புறப்பட்டது. மாலை 5 மணியளவில் மகாராஷ்டிரா மாநிலம் ஜல்காவ் மாவட்டம் பசோரே அருகே மகேஜி – பர்தாடே ரயில் நிலையங்களுக்கு இடையே சென்று கொண்டிருந்தது. அப்போது புஷ்பக் எக்ஸ்பிரஸ் ரயிலின் ஒரு பெட்டியில் தீப்பிடித்ததாக பயணிகளிடையே வதந்தி பரவியது. இதனால் அதிர்ச்சி அடைந்த பயணிகள், உடனே அபாயச் சங்கிலியை இழுத்து ரயிலை நிறுத்தினர்.
ரயிலில் தீப்பிடித்த வதந்தியை நம்பி ரயிலை விட்டு இறங்கியவர்கள் உறவினர்கள் மற்றும் பிற பயணிகள் கண் முன்பே மற்றொரு ரயிலில் அடிபட்டு இறந்ததை பார்த்து பலர் கதறி அழுதனர். பலர் படுகாயங்களுடன் உயிருக்கு போராடிய சம்பவம் பார்ப்போரை பதை பதைக்கச் செய்தது. ரயிலுக்கு அடியிலும், தண்டவாளத்துக்கு அருகேயும் உயிரிழந்த பயணிகளின் உடல் பாகங்கள் சிதறிக் கிடக்கும் வீடியோ வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த விபத்தில் 12 பேர் பலியானார்கள். விபத்தில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் வழங்கப்படும் என மகாராஷ்டிரா முதல்வர் பட்நவிஸ் அறிவித்துள்ளார்.
உயிருக்கு போராடிய பலர் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர். அங்கு நேற்று இரவு ஒருவர் இறந்தார். எனவே பலி எண்ணிக்கை 13 ஆக உயா்ந்தது. மேலும் பலர் உயிருக்கு போராடிக்கொண்டு உள்ளனர்.