மகாராஷ்டிரா சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் தலைமையிலான மகா விகாஸ் அகாடி மற்றும் பாஜ தலைமையிலான மகாயுதி கூட்டணி மொத்தம் உள்ள 288 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்து விட்டன. அவர்கள் மனுத்தாக்கலும் செய்துவிட்டனர். மனுக்களை வாபஸ் பெற வரும் 4-ம் தேதி கடைசி நாள்.
அதிருப்தி தலைவர்கள் பலர் கூட்டணிக்கு எதிராக போட்டியிடுவது கவலை அளிப்பதாக மகாயுதி மற்றும் மகா விகாஸ் அகாடி கூட்டணி கட்சி தலைவர்கள் தெரிவித்துள்ளனர். மனுக்களை வாபஸ் பெற வரும் 4-ம் தேதி கடைசி நாள் என்பதால், அதற்குள் வேறுபாடுகள் களையப்படும் என அவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். நவம்பர் 4-ம் தேதிக்கு பின்பே, ஒவ்வொரு கூட்டணியிலும் உள்ள அதிருப்தி தலைவர்களின் உண்மையான எண்ணிக்கை தெரியவரும் என கூறப்படுகிறது.
‘‘தகுதி மற்றும் வெற்றி வாய்ப்பு அடிப்படியிலேயே தொகுதிகள் முடிவு செய்யப்பட்டது’’ என காங்கிரஸ் மூத்த தலைவர் ஒருவர் தெரிவித்தார். தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சுனில் தத்கரே கூறுகையில், ‘‘மகாயுதி கூட்டணியின் தொகுதி பங்கீடு முறை, அனைத்து அம்சங்களையும் கருத்தில்கொண்டு, வெற்றி பெறுவதை மட்டுமே நோக்கமாக கொண்டு முடிவு செய்யப்பட்டது. எங்கள் கூட்டணி நிச்சயம் ஆட்சியை தக்கவைக்கும். உட்கட்சி பிரச்சினைகளை தீர்க்க எங்கள் கட்சி மூத்த தலைவர்களை சந்தித்து பேசுவோம்’’ என்றார்.