மத்தியபிரதேச மாநிலம் பேதுல் மாவட்டத்தை பூர்விகமாக கொண்டவர் பிரிஷா. ஐந்தரை வயது சிறுமி. தற்போது மகாராஷ்டிர மாநிலம் மும்பை அருகே தானேயில் தனது பெற்றோர், 2 சகோதரிகளுடன் வசிக்கிறார். இவரது தந்தை லோகேஷ் மும்பையில் ஐ.டி. என்ஜினீயராக பணிபுரிகிறார். இவர் ஒரு மலையேற்ற வீரரும்கூட. அப்பா வழியில் மகள் பிரிஷாவுக்கும் மலையேற்றத்தில் ஆர்வம் பிறந்திருக்கிறது.
அதையடுத்து அவருக்கு மலையேற்றத்துக்கான முறையான பயிற்சியை தந்தை லோகேசும், தாய் சீமாவும் வழங்கினர். அதன் விளைவாக, பிரிஷா தனது 2½ வயதிலேயே மலையேறத் தொடங்கிவிட்டார். தனது 3 வயதில், மகாராஷ்டிரத்திலேயே உயரமான சிகரமான கால்சுபாயை தொட்டுவிட்டார். அந்த வழியில், எவரெஸ்ட் அடிவார முகாமை எட்டும் கடினமான முயற்சிக்கான பயிற்சியையும் பெற்றோரின் வழிகாட்டலில் பிரிஷா தொடங்கினார். தினமும் 5, 6 மைல் தூரம் நடப்பது, ஏரோபிக்ஸ் பயிற்சி, தனது அடுக்குமாடிக் குடியிருப்பு படிகள், பூங்கா சுவரில் ஏறுவது என்று தயாரானார்.
கடந்த மே 24-ந்தேதி நேபாளத்தின் லுக்லாவில் இருந்து தனது தந்தையுடன் மலையேற்றத்தை தொடங்கிய பிரிஷா, இம்மாதம் 1-ந்தேதி எவரெஸ்ட் அடிவார முகாமை அடைந்தார். அங்கு இந்திய தேசியக்கொடியுடன் பெருமிதத்தோடு ‘போஸ்’ கொடுத்தார்.
எவரெஸ்டின் அடிவார முகாம்தானே என்று சாதாரணமாக எண்ணிவிட வேண்டாம். இது கடல் மட்டத்தில் இருந்து 17 ஆயிரத்து 598 அடி உயரத்தில் இருக்கிறது. பயிற்சி பெற்ற மலையேற்ற வீரர்களே இதை எட்டுவதற்கு சிரமப்படுவார்கள். ஆனால் 5½ வயதே ஆகும் பிரிஷா, இந்த உயரத்தை தொட்டு, பிரமிப்பூட்டி இருக்கிறார்.
பலருக்கு மூச்சுத்திணறல், தலைவலி, மலைக்காய்ச்சல் போன்ற பாதிப்புகள் ஏற்படும். ஆனால் பிரிஷா கஷ்டங்களை எல்லாம் எளிதாக கடந்து இந்த சாதனையை படைத்துவிட்டாள்’ என்று பூரிப்பாய் சொல்கிறார் தந்தை லோகேஷ். அடுத்து, உலகின் பல்வேறு பகுதிகளில் உள்ள 5 ஆயிரம் முதல் 6 ஆயிரம் மீட்டர் உயரமுள்ள சிகரங்களில் பிரிஷா ஏறுவார் என்றும் அவர் கூறுகிறார்.