முல்லைப் பெரியாறு அணையில் பருவநிலை மாற்றங்களின் போது அணையின் பாதுகாப்பை உறுதி செய்ய உச்சநீதிமன்றம் ஆய்வுக்குழுக்களை நியமித்தது. இந்த நிலையில், முல்லைப் பெரியாறு அணையில் மத்திய கண்காணிப்பு குழுவினர் இன்று ஆய்வு நடத்துகின்றனர். குழுவில் மத்திய நீர்வளக்குழு செயற்பொறியாளர் சதீஷ்குமார், தமிழக அரசு பிரதிநிதிகளாக அணையின் செயற்பொறியாளர் ஜே.சாம் இர்வின், கோட்டப் பொறியாளர் த.குமார், கேரள அரசு பிரதிநிதிகள் கட்டப்பனை நீர் வளத்துறை செயற் பொறியாளர் ஹரிக்குமார், உதவி பொறியாளர் பிரஸீத் பங்கேற்கின்றனர் துணைக்குழு தலைவராக இருந்த நீர்வள ஆதாரத்துறை செயற்பொறியாளர் இடமாற்றம் செய்யப்பட்டு அவருக்கு பதிலாக சதீஷ்குமார் தலைமையில் மத்திய துணைக் குழுவினர் ஆய்வு நடத்துகின்றனர். இன்று காலை நிலவரப்படி முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டம் 127.75 அடி உயரமாக உள்ளது. (மொத்த உயரம் 152 அடி). அணையில் நீர் இருப்பு 4,212 மில்லியன் கன அடியாகவும் உள்ளது. அணைக்குள் நீர் வரத்து விநாடிக்கு 164.86 கன அடியாகவும், அணையிலிருந்து தமிழக பகுதிக்கு நீர் வெளியேற்றம் விநாடிக்கு 1,055 கன அடியாகவும் உள்ளது.