நெல்லை மாவட்டம் முக்கூடலில் இதுநாள் வரை எந்த கல்லூரியும் இல்லை. இந்த பகுதி பெரும்பாலும் நடுத்தர மக்கள் வாழும் பகுதி. இதனால் இங்குள்ள குழந்தைகள் கல்லூரி கல்விக்காக 25 கி.மீ. தொலைவில் உள்ள நெல்லை, அல்லது 15 கி.மீ. தொலைவில் உள்ள அம்பாசமுத்திரம் போன்ற நகரங்களுக்கு செல்ல வேண்டும்.
இதற்கான வசதி இல்லாதவர்கள் மேல்நிலைக்கல்வியுடன் நிறுத்திக்கொள்ளும் நிலை தான் இருந்தது. ஏழை , நடுத்தர குடும்ப குழந்தைகள் உயர்கல்வி கற்க முடியாத நிலை உள்ளதை அறிந்த முக்கூடலை சேர்ந்த அமெரிக்க தொழில் அதிபரும், முன்னாள் எம்.எல்.ஏ. பாலகனின் மகனுமான பாலகன் ஆறுமுகசுவாமி, முக்கூடலில் , தனது பெற்றோர் பெயரில் பாலகன் சரஸ்வதி மகளிா் கலை அறிவியல் கல்லூரியை தொடங்கி உள்ளார்.
இதன் தொடக்க விழா நேற்று கல்லூரி வளாகத்தில் விமரிசையாக நடந்தது. விழாவுக்கு கல்லூரி நிறுவனர் பாலகன் ஆறுமுகசாமி தலைமை தாங்கி வரவேற்றார். தெலங்கானா, மற்றும் புதுச்சேரி மாநில கவர்னர் தமிழிசை சவுந்தர்ராஜன் விழாவில் கலந்து கொண்டு கல்லூரியை திறந்து வைத்து வாழ்த்தி பேசினார். அவர் பேசும்போது, இந்த கல்லூரியின் வளர்ச்சிக்கு எப்போதும் எனது ஆதரவு இருக்கும், இந்த கல்வி நிறுவனம், கலைக்கல்லூரியுடன் மட்டுமல்ல, தொழில் நுட்ப கல்லூரி, மருத்துவ கல்லூரி, பல்கலைக்கழகம் என வளரவேண்டும், இந்த தொடக்க விழா மட்டுமல்ல, நீங்கள் தொடங்கும் ஒவ்வொரு துறைக்கும் எனது ஆதரவு இருக்கும். அனைவருக்கும் வாய்ப்பு கொடுங்கள். வாய்ப்புகள் பெண்களை மேம்படுத்தும் என வாழ்த்தினார்.
கல்லூரி நிறுவனர் பாலகன் ஆறுமுகசுவாமி பேசும்போது, இந்த கல்லூரியில் பாடத்திட்டங்களுடன், சட்டம், மனோதத்துவம், இசை ஆகியவற்றையும் கற்றுகொடுக்க இருக்கிறோம் என்றார்.
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக துணைவேந்தர் சந்திரசேகர் பேசும்போது, கல்லூரி அருமையாக உருவாக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் உள்ளதைப்போல வடிவமைத்துள்ளனர் என்று பாராட்டினார். முடிவில் கல்லூரி முதல்வர் கிருஷ்ணவேணி நன்றி கூறினார். முன்னதாக கல்லூரி டிரஸ்டிகள் கமலா சவுந்தரபாண்டியன், இந்திரா குமரேசன் ஆகியோர் கவர்னர் தமிழிசைக்கு பொன்னாடை அணிவித்து, பூச்செண்டு கொடுத்து வரவேற்றனர். பொறியாளர் கங்காதரன், டாக்டர் சத்யா ஆகியோர் விழாவில் கவுரவிக்கப்பட்டனர்.
விழாவில் முன்னாள் மத்திய அமைச்சர் தனுஷ்கோடி ஆதித்தன், முன்னாள் எம்.பிக்கள் சிவப்பிரகாசம், ஜெயசீலன், மற்றும் நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ. தொழில் அதிபர் ரப்பானி உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.