தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்ததை தொடர்ந்து கர்நாடக மாநிலம் குடகு மற்றும் கேரள மாநிலம் வயநாடு ஆகிய பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக கர்நாடக மாநிலத்தில் உள்ள கிருஷ்ணராஜ சாகர் மற்றும் கபினி அணைகள் தனது முழு கொள்ளளவை எட்டியது.
இதனால் அணையின் பாதுகாப்பு கருதி கிருஷ்ணராஜ சாகர், கபினி அணைகளில் இருந்து 1 லட்சத்து 66 ஆயிரத்து 234 கனஅடி தண்ணீர் தமிழகத்துக்கு காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது. இதன் காரணமாக, மேட்டூர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
அதன்படி இன்று காலை நிலவரப்படி, அணைக்கு விநாடிக்கு 1.47 லட்சம் கன அடி நீர் வந்துகொண்டிருக்கிறது. அணையில் இருந்து 1,000 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. அணையின் நீர் மட்டம் 109.20
அடியாகவும், நீர் இருப்பு 77.27 டி.எம்.சி. ஆகவும் உள்ளது. தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்த வண்ணம் உள்ளதால் இன்னும் ஓரிரு நாட்களில் மேட்டூர் அணை தனது முழு கொள்ளளவை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் முதல்-அமைச்சர் உத்தரவின்பேரில் காவிரி டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. அமைச்சர் கே.என்.நேரு அணையில் இருந்து தண்ணீரை திறந்து வைத்தார். முதற்கட்டமாக 12,000 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இன்று திருச்சி முக்கொம்பு வந்தடைந்தது காவிரி நீர் . விவசாயிகள் -பொதுமக்கள் உற்சாகமடைந்து வருகின்றனர்.