மயிலாடுதுறை மாவட்டம் பட்டவர்த்தி அருகே உள்ள நடராஜபுரம் வடக்கு தெருவை சேர்ந்தவர் ராஜமாணிக்கம் மகன் ராஜேஷ்(26). இவருக்கு விபத்தில் ஒரு காலினை இழந்து செயற்கை கால் பொருத்தப்பட்டுள்ளது. இவர் விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகர் . இவர் மீது மணல்மேடு காவல் நிலையத்தில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், இவர் மீது மணல்மேடு காவல் நிலையத்தில்குற்ற சரித்திர பதிவேடு பதிவு செய்யப்பட்டு போலீஸ் கண்காணிப்பில் உள்ளவர்.
நேற்று இரவு நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்த நிலையில் அருகே உள்ள பெட்ரோல் பங்கிற்கு இயற்கை உபாதை கழிப்பதற்காக இரு சக்கர வாகனத்தில் தனியாக சென்றுள்ளார். பெட்ரோல் பங்கிற்கு அருகில் மயிலாடுதுறை செல்லக்கூடிய பிரதான சாலையில் அடையாளம் தெரியாத சிலர் மர்ம நபர்களால் அறிவாளால் தலை மற்றும் உடல் பகுதிகளில் வெட்டப்பட்டு சம்பவ இடத்திலேயே ராஜேஷ் உயிரிழந்துள்ளார். தகவல் அறிந்த பெற்றோர் , மற்றும் விசிக பிரமுகர்கள் ஏராளமானோர் திரண்டனர்.
குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி உடலை அப்புறப்படுத்த விடாமல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் நாகப்பட்டினத்தில் இருந்து மோப்பநாய் வரவழைக்கப்பட்டு போலீசார் முதற்கட்ட விசாரணையை தீவிர படுத்தினர். மாவட்ட எஸ்பி மீனா நேரில் பார்வையிட்டார். மேலும் ஏராளமான போலீசார் அப்பகுதியில் குவிக்கப்பட்டுள்ள நிலையில் வினோத் என்பவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் கொலை சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். முன்விரோதம் காரணமாக நடைபெற்ற கொலையா என்ற கோணத்திலும் விசாரணையை காவல்துறையினர் தீவிரப்படுத்தி உள்ளனர். குற்றவாளிகளை கைது செய்யாமல் உடனே அப்புறப்படுத்த கூடாது என்று உறவினர்களும் விசிக்கவினரும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஒரு சில மணி நேரம் நடந்த போராட்டத்திற்கு பிறகு உடலை எடுத்து செல்ல அனுமதித்தனர். தற்பொழுது ராஜேஷ் உடல் மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் உடல் கூறு ஆய்விற்காக வைக்கப்பட்டுள்ளது.
