எம்.ஆர்.விஜயபாஸ்கரின் தந்தை எம்.ராமசாமி, மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனு.. கரூர் மாவட்டம் புகளூர் அத்திபாளையத்தில் 2011-2021 வரை கல்குவாரி நடத்த உரிமம் பெற்றிருந்தேன். குவாரி உரிமம் காலாவதியாக ஒரு மாதம் இருந்த நிலையில், அந்த நிலத்தை கண்ணப்பன் என்பவருக்கு விற்பனை செய்தேன். பின்னர், குவாரி உரிமத்தை ரத்து செய்யக் கோரி மனு அளித்தேன். குவாரியில் எந்த விதிமீறலும் இல்லை என புகளூர் வட்டாட்சியர் அளித்த அறிக்கையின் அடிப்படையில், குவாரி உரிமத்தை ரத்துசெய்து கரூர் ஆட்சியர் உத்தரவிட்டார். இந்நிலையில், குவாரியில் சட்டவிரோதமாக கற்கள்வெட்டி எடுக்கப்பட்டதாகக் கூறிரூ.15.55 கோடி அபராதம் விதித்துகரூர் கோட்டாட்சியர் கடந்த ஜூலைமாதம் உத்தரவிட்டார். இது தொடர்பாக விளக்கம் கேட்டு நோட்டீஸும்அனுப்பவில்லை. எனவே, கோட்டாட்சியரின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது. இந்த மனுவை நீதிபதி பி.புகழேந்தி விசாரித்தார். மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் அஜ்மல்கான் வாதிடும்போது, “அரசியல் காரணங்களுக்காக அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மனுதாரர் குவாரி நிலத்தை விற்ற நிலையில், அதை வாங்கியவர் சட்டவிரோதமாக குவாரி நடத்தி வந்தார். இதுகுறித்து ஆட்சியரிடம் புகார் அளித்தும், உரிய நடவடிக்கை எடுக்கவில்லை” என்றார். கூடுதல் அட்வகேட் ஜெனரல் வீரா கதிரவன் வாதிடும்போது, “குவாரியில் புகளூர் வட்டாட்சியர் ஆய்வு நடத்தி முறைகேடு நடந்ததாக அளித்த அறிக்கையின் அடிப்படையில் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது” என்றார். இதையடுத்து நீதிபதி புகழேந்தி அளித்த உத்தரவு… லஞ்ச ஒழிப்பு சோதனைக்குப் பிறகு, மனுதாரரைப் பாதுகாக்கும் நோக்கில் அபராத உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஒரு குவாரியில் மட்டும் ரூ.15.55 கோடி அளவுக்கு முறைகேடு நடந்துள்ளது. தமிழகம் முழுவதும் 1,700 கல் குவாரிகள் உள்ளன. எவ்வளவு முறைகேடு நடந்திருக்கும்?. குவாரி உரிமம், ஒழுங்குபடுத்துதல், கண்காணித்தல் ஆகியவற்றுக்காக தனி துறையை உருவாக்க வேண்டும். குவாரி சட்டம்,விதிகளில் பாதுகாப்பு அம்சங்களைக் கொண்டுவர வேண்டும். ட்ரோன் மூலம் கண்காணிப்பு உள்ளிட்ட தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி குவாரிகளை அடிக்கடி அளவீடு செய்தால், முறைகேடுகளைத் தடுக்கலாம். மனுதாரருக்கு விளக்கம் கேட்டுநோட்டீஸ் அனுப்பாமல் அபராத உத்தரவு பிறப்பித்தது, இயற்கை நீதிக்கு எதிரானது. எனவே, அபராத உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. எனினும், மனுதாரருக்கு குவாரி உரிமம் வழங்கப்பட்ட இடத்தில் மாவட்ட ஆட்சியர், நில அளவைத் துறை, கனிமவளத் துறை சார்பில், சட்ட விரோதமாக எவ்வளவு கற்கள்வெட்டி எடுக்கப்பட்டுள்ளன என்பதை ட்ரோன் உதவியுடன் அளவீடுசெய்ய வேண்டும். பின்னர், மனுதாரர், நிலத்தை வாங்கிய கண்ணப்பன் ஆகியோரிடம் கோட்டாட்சியர் மூலம் விசாரணை நடத்தி, உரிய உத்தரவுகளைப் பிறப்பிக்க வேண்டும். மனுதாரர் குவாரி முறைகேடுதொடர்பாக புகளூர் வட்டாட்சியரிடம் அளித்த அறிக்கையின் அடிப்படையில், மாவட்ட ஆட்சியர், லஞ்ச ஒழிப்புத் துறை விசாரித்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு நீதிபதி உத்தரவில் தெரிவித்துள்ளார்.