உத்தரபிரதேச மாநிலத்தில் கடந்த 2005-ம் ஆண்டு பகுஜன் சமாஜ் கட்சி எம்.எல்.ஏ. ராஜூ பால் மர்ம நபர்களால் கொல்லப்பட்டார். இந்த வழக்கில் முன்னாள் எம்.பி.யும், முன்னாள் ரவுடியுமான ஆதிக் அகமது உள்ளிட்டோர் மீது குற்றம் சாட்டப்பட்டது. இந்த கொலை வழக்கின் முக்கிய சாட்சியான வக்கீல் உமேஷ் பால் கடந்த பிப்ரவரி மாதம் 24ம் தேதி சுட்டுக்கொல்லப்பட்டார். இந்த வழக்கில் ஆதிக் அகமது மற்றும் அவரது மகன் ஆசாத், கூட்டாளி குலாம் ஆகியோர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டனர். ஆசாத், குலாம் ஆகியோர் குறித்து துப்பு கொடுத்தால் 5 லட்சம் ரூபாய் சன்மானம் வழங்கப்படும் என காவல்துறை அறிவித்திருந்தது.
இந்நிலையில், ஆதிக் அகமதுவின் மகன் ஆசாத் மற்றும் அவரது கூட்டாளி குலாம் ஆகியோர் இன்று போலீசாரால் சுட்டுக்கொல்லப்பட்டனர். ஜான்சியில் அவர்களை மாநில அதிரடிப்படை போலீசார் பிடிக்க முயன்றபோது ஏற்பட்ட சண்டையில் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். குற்றவாளிகளிடம் இருந்து வெளிநாட்டு ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டதாக சட்டம் ஒழுங்கு பிரிவு சிறப்பு டிஜிபி தெரிவித்தார்.