மக்களவைத் தொகுதிகள் மறுசீரமைப்பு தொடர்பாகப் புதியதொரு மசோதா தாக்கல் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், மக்கள் தொகை அடிப்படையிலே தொகுதிகள் எண்ணிக்கை மறுசீரமைப்பு செய்யப்படும் என்பதையொட்டி, தமிழக முதல்வர் அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு கடிதம் எழுதியிருந்தார்.
மறுசீரமைப்பு என்பது மக்கள் தொகை அடிப்படையில் மட்டுமே செய்ய முடியாது என்பதை ஏற்றுக்கொண்டதன் அடிப்படையில்தான் நாடாளுமன்றம் சட்டம் இயற்றி தள்ளி வைத்தது. இதற்கு மக்கள்தொகையை அடிப்படையாகக் கொண்டு மறுசீரமைப்பு செய்ய முடியாது என்பதை நாடாளுமன்ற ஒப்புக்கொண்டதாகத்தான் பொருள் கொள்ள வேண்டும்.
1971-ல் என்ன நிலைப்பாட்டை எடுத்தோமோ, அதுதான் தொடர வேண்டும் என கடிதம் எழுதியிருக்கிறார். அந்தக் கடிதத்திற்குப் பதில் அளிக்கிற வகையில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்றைக்கு பேசுகிறபோது விகிதாசார அடிப்படையில்தான் மறுசீரமைப்பு அமையும், அப்படி விகிதாசார அடிப்படையில் தொகுதி மறுசீரமைப்பு செய்யும் போது தமிழ்நாட்டிற்கு ஒரு தொகுதி கூட குறையாது என இந்தியில் அறிவித்து இருக்கிறார்.
அது ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு, ஒன்றிய அரசின் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் ப்ரோ – ரேட்டா (pro-rata) என சொல்லப்பட்டு இருக்கிறது. அந்த ப்ரோ – ரேட்டா என்பது இப்போது இருக்கும் தொகுதிகளின் அடிப்படையில் உயருமா அல்லது மக்கள் தொகை அடிப்படையில் உயருமா என்பதற்கு, எந்த பதிலும் இல்லை.
அந்தக் குழப்பதைத் தீர்ப்பதாக எண்ணிக் கொண்டு அண்ணாமலை திடீரென நாடாளுமன்றத் தொகுதிகளின் விகித அடிப்படையில் எண்ணிக்கை உயரும் என்று உறுதியாக தெரிவித்து இருக்கிறார். ஆனால் உள்துறை அமைச்சர் அவ்வாறு சொல்லவில்லை; உள்துறை அமைச்சரின் பேச்சுக்கு அண்ணாமலை புதியதாக விளக்கம் அளித்துள்ளார். இந்தக் கருத்து தவறு. எனவேதான், மக்கள்தொகை அடிப்படையில் தொகுதி மறுசீரமைப்பு தமிழ்நாட்டு மக்களுக்கு உடன்பாடு அல்ல, தமிழக அரசுக்கு ஏற்புடையது அல்ல என்பதை முதல்வர் தெள்ளத் தெளிவாகக் கடிதம் எழுதியுள்ளார். அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கும் அழைப்பு விடுத்துள்ளார்.
எங்களின் எண்ணிக்கைக் குறைய கூடாது என்பது மட்டுமல்ல; நீங்கள் கொண்டு வருகிற எந்தவொரு திட்டத்திலும் எங்களுக்கு அதே எண்ணிக்கையை வைத்துக்கொண்டு வட மாநிலங்களுக்கு மக்கள்தொகை அடிப்படையில் அதிகமாக கொடுத்தாலும், அது அநீதிதான் என்பதில் நாங்கள் மிக தெளிவாக இருக்கிறோம்.
ப்ரோ-ரேட்டா என்பது 1971-ல் எடுக்கப்பட்ட சென்செஸ் அடிப்படையில் இப்போது இருக்கிற நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையில் அப்படியே உயர வேண்டும். 848 இருக்கைகளை நாடாளுமன்றத்தில் போட்டுள்ளனர். இதில் மக்கள் தொகை அடிப்படையில் செயல்படுத்தினால் எங்கள் எண்ணிக்கை குறையும். ப்ரோ – ரேட்டா அடிப்படையில் போனாலும் எண்ணிக்கை குறையும். எனவே, 1971-ல் என்ன சொன்னார்களோ, அதன் அடிப்படையில் இப்போது இருக்கிற 39 தொகுதி எண்ணிக்கையை ப்ரோ-ரேட்டாவாக எல்லோருக்கும் உயர்த்தினால் எங்களுக்கும் உயர்த்த வேண்டும்.
மக்கள்தொகையை குறைக்க வேண்டும் என சொன்னது ஒன்றிய அரசாங்கம். அதைச் செய்த எங்களுக்கு மட்டும் ஏன் தண்டனை என்கிற கேள்வி எழுகின்றது. மக்கள் தொகையை கட்டுபடுத்தியிருக்கிறோம். திட்டங்கள் மூலம் முன்னேறி இருக்கிறோம். தமிழ்நாடு முதன்மை மாநிலமாக வந்துள்ளது. இதற்காக நமது பிரதிநிதித்துவம் குறைக்கப்பட்டால், அது தண்டனை அல்லவா?
தமிழகத்தின் மக்கள் தொகை எண்ணிக்கை குறைந்துள்ளதால், அதன் அடிப்படையில் தொகுதி மறுசீரமைப்பு நடந்தால், நமது குரல் நெறிக்கப்படும். தமிழகத்துக்கு குறையாமல் மற்ற மாநிலங்களுக்கு கூடினால் பிரச்சனைதானே. ப்ரோ – ரேட்டா என்பதும் பிரச்சினைதான். புதிய நாடாளுமன்றத்தை திறக்கும்போது இருக்கைகள் 848 ஆக அதிகமாக்கப்படும் என தெரிவித்து இருந்தனர்.
தமிழ்நாட்டு உணர்வுக்கு எதிரான போக்கு பாஜகவுக்கு இருக்கிறது; ஒரே மொழி, ஒரே தேர்தல், ஒரே இந்தியா என்ற கருத்து தமிழ்நாட்டுக்கும், மாநிலங்களுக்கும் எதிரான அரசியல் போக்குதான். இவ்வாறான அரசியலை பாஜக வைத்து கொண்டு, தமிழ்நாடு தனியாக இருக்கிறது என்றால் என்ன அர்த்தம். பாஜக, எதனையும் வெளிப்படையாகச் சொல்வதில்லை, அவர்கள் அரசியல் நேர்மையற்றவர்கள். அதனால்தான் பாஜகவை நம்ப முடியாது என்று சொல்கிறோம்.
இவ்வாறு ராசா கூறினார்.