இசையமைப்பாளா் இளையராஜாவின் மகளும், பின்னணிப் பாடகியுமான பவதாரிணி (47) உடல் நலக்குறைவு காரணமாக இலங்கையில் நேற்று மாலை காலமானாா். கல்லீரலில் ஏற்பட்ட புற்று நோய் காரணமாக கடந்த 5 மாதங்களுக்கும் மேலாக இலங்கையில் ஆயுா்வேத மருத்துவ சிகிச்சை மேற்கொண்டு வந்தாா்.
இந்த தகவல் அறிந்த இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இலங்கை புறப்பட்டுச் சென்றார். பவதாரிணி மறைவிற்கு அரசியல், திரைப்பிரப்பலங்கள் என பலரும் தங்கள் இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், திமுக துணைப்பொதுச்செயலாளரும், தூத்துக்குடி மக்களவைத் தொகுதி உறுப்பினருமான கனிமொழி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பவதாரிணியின் மறைவுக்கு இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார்.
அதில், இதுவரை வெளிவராத, பவதாரிணியின் குரலில் அமைந்த பாடல் ஒன்றையும் கனிமொழி எம்.பி பகிர்ந்து அவருக்கு புகழ் அஞ்சலி செலுத்தியுள்ளார். ‘அம்மாவின் வாசனை’ என்ற தலைப்பில் நான் எழுதிய கவிதையை, இசைஞானி இளையராஜா அவர்கள் பாடலாக இசையமைத்தார். பவதாரிணி அவர்களின் அழகான குரலில் அப்பாடல் பதிவு செய்யப்பட்டது.