உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல்’ நாடாளுமன்றத்தில் ஒலித்திட வேண்டிய தமிழ்நாட்டின் கருத்துகள் என்ற பெயரில், இந்த ஆண்டு நடக்க உள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்காக திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் திமுக தலைவரும்,தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அவர்களின் அறிவுறுத்தலின் படி திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி கருணாநிதி எம்.பி தலைமையிலான 11 பேர் கொண்ட குழு மக்களவைத் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாகத் தமிழகம் முழுவதும் அந்த குழுவினர் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்களை நேரில் சந்தித்து கோரிக்கை மனுக்களைப் பெற்று வருகின்றனர்.
இன்று (10/02/2024) கோவை பீளமேட்டில் உள்ள தனியார் ஓட்டலில் இந்த குழுவினரின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி கருணாநிதி எம்.பி தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் கோவை, நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த தொழில்துறையினர், கல்வியாளர்கள், சிறு குறு தொழில் முனைவோர்கள், அரசு மற்றும் தனியார் ஊழியர்கள் சங்கங்கள், தொண்டு நிறுவனங்கள், பொதுமக்கள், திமுக நிர்வாகிகள் மற்றும் கூட்டணிக் கட்சி சார்ந்த நிர்வாகிகள் உள்ளிட்ட என அனைத்துத் தரப்பினரும் கலந்துகொண்டு தேர்தல் அறிக்கையில் இடம்பெற வேண்டிய அம்சங்கள் குறித்துத் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவினருடன் கலந்துரையாடி கோரிக்கை மனுக்களை வழங்கினர்.
2024 மக்களவைத் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு உறுப்பினர்கள் திமுக விவசாய அணிச்
செயலாளர் ஏ.கே.எஸ்.விஜயன், திமுக வர்த்தகர் அணி துணைத் தலைவர் மற்றும் தமிழக அரசு தலைமைக் கொறடா கோவி.செழியன், தி.மு.க மாணவர் அணி செயலாளர்.வி.எம்.பி.எழிலரசன் எம்.எல்.ஏ, நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் கே.ஆர்.என்.ராஜேஸ்குமார் எம்.பி, தி.மு.க. அயலக அணிச் செயலாளர் எம்.எம்.அப்துல்லா எம்.பி, சென்னை மாநகராட்சி மேயர் பிரியா ஆகியோர் பரிந்துரைகளை மக்களிடமிருந்து பெற்றனர்.
மேலும், கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா.கார்த்திக் (முன்னாள் எம்.எல்.ஏ), கோவை வடக்கு மாவட்ட செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவை தெற்கு மாவட்ட செயலாளர் தளபதி முருகேசன், கோவை மாநகராட்சி மேயர் கல்பனா ஆனந்தகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து முடித்ததும் கட்சி நிர்வாகிகள் தெரிவித்த கருத்துகள் மற்றும் பொது மக்கள் தெரிவித்த கருத்துகள் அனைத்தும் ஆய்வு செய்யப்படும். அவை அனைத்தும் தொகுக்கப்பட்டு தி.மு.க. தேர்தல் அறிக்கையாக இறுதி செய்யப்படும். மேலும், பொதுமக்களிடம் கருத்துக்கேட்கும் நடைமுறை துவங்கியுள்ளது. நாடாளுமன்ற தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவிற்குப் பரிந்துரைகளை எழுத்துப்பூர்வமாகவோ, சமூகவலைதளங்கள் மூலமாகவோ, தொலைபேசி, மின்னஞ்சல் மூலமாகவோ அனுப்ப பொதுமக்களுக்கு தி.மு.க. தலைமை வேண்டுகோள் விடுத்துள்ளது. அடுத்த மாதம் தி.மு.க. தேர்தல் அறிக்கை வெளியாகும்.