திருச்சி – டெல்லி நேரடி விமான சேவைக்கான ஸ்லாட் (slot) வழங்கிட வேண்டி கோரிக்கைக் கடிதத்துடன், இன்று (27.03.2025) ஒன்றிய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடுவை அவரது நாடாளுமன்ற அலுவலகத்தில் எம்பி துரை வைகோ சந்தித்தார். கடந்த 01.07.2024 அன்று அமைச்சரைச் சந்தித்து முன்வைத்த அதே கோரிக்கையை அவருக்கு நினைவுபடுத்தியதோடு, கடந்த பிப்ரவரி 14 அன்று டெல்லியில் உள்ள ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவன அலுவலகத்தில் அவர்களின் உயரதிகாரிகளைச் சந்தித்து, திருச்சி – டெல்லி நேரடி விமான சேவையைத் தொடங்க வேண்டுமெனக் கேட்டுக்கொண்டதையும் தெரிவித்தேன். அதனை ஏற்றுக்கொண்ட ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம், டெல்லி இந்திரா காந்தி பன்னாட்டு விமான நிலையத்திற்கு திருச்சியிலிருந்து நேரடி விமான சேவையைத் தொடங்கத் தயாராக உள்ளதையும் சுட்டிக்காட்டி, அந்தச் சேவைக்கு தேவையான இந்திரா காந்தி பன்னாட்டு விமான நிலையத்தில் ஒதுக்கப்பட வேண்டிய ஸ்லாட்டை (slot) விரைவாக உறுதிப்படுத்தித் தரும்படி அமைச்சரிடம் கேட்டுக்கொண்டேன்.
திருச்சி – டெல்லி நேரடி விமானப் போக்குவரத்துச் சேவையால், திருச்சி கட்டமைப்பு வளர்ச்சியில் மேம்படுவதோடு, அதைச் சுற்றியுள்ள 11 மத்திய மாவட்டங்களும் பயனடையும் என எடுத்துரைத்தேன்.
உடனே,எனது எதிரிலேயே, டெல்லி இந்திராகாந்தி பன்னாட்டு விமான நிலைய முக்கிய அதிகாரிகளை அலைபேசியில் அழைத்துப் பேசி, ஏற்கனவே இந்த ஸ்லாட்டு குறித்து கோரி இருந்த விஷயத்தை எடுத்துச் சொல்லி, இந்த மாதத்திற்குள்ளாகவே ஸ்லாட் வழங்கப்பட வேண்டும் என்று அழுத்தமாக வலியுறுத்தினார். மனநிறைவோடு அமைச்சருக்கு நன்றி தெரிவித்து விடைப்பெற்றேன்.
கடந்த மார்ச் 22 அன்று திருச்சி – சென்னை விமான சேவையை நான் தொடங்கி வைத்தது போலவும், எதிர்வரும் 30.03.2025 அன்று திருச்சி – மும்பை விமான சேவை தொடங்கப்படவிருப்பது போலவும், மிக விரைவில் திருச்சி – டெல்லி நேரடி விமானப் போக்குவரத்துச் சேவை குறித்த அறிவிப்பை ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் வெளியிடும் என்று நம்பிக்கை தெரிவித்துக்கொள்வதோடு, நானும் அதை எதிர்நோக்கி காத்திருக்கிறேன் என்று இவ்வாறு தெரிவித்துள்ளார்.