தமிழகத்தில் புதிய தொழில்களை தொடங்க முதலீடுகளை ஈர்க்கும் வகையில், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ளார். இதுவரை பல்வேறு முன்னணி நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.
இந்த நிலையில், ஆப்பிள், சிஸ்கோ, எச்.பி. நிறுவனங்களுக்கு மின்னணு உபகரணங்களை விநியோகம் செய்யும் முக்கிய நிறுவனமாக உள்ள ஜேபில் நிறுவனத்தின் தொழிற்சாலை திருச்சியில் அமைகிறது. இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் இன்று கையெழுத்தாகியுள்ளது. இதன் மூலம் 5,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று கூறப்படுகிறது.
இதைபோல காஞ்சிபுரத்தில் உள்ள ராக்வெல் ஆட்டோமேஷன் (Rockwell Automation)தனது தொழிற்சாலையை ரூ.666 கோடியில் விரிவாக்கம் செய்கிறது. இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்தாகியுள்ளது. இதன்மூலம் 365 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.