நாட்டின் மிகப்பெரிய கத்தோலிக்க தேவாலயங்களில், வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதா பேராலயமும் ஒன்று. வேளாங்கண்ணி மாதா பேராலயத்தில் ஆண்டு தோறும் ஆகஸ்ட் 29ம் தேதி கொடியேற்றம் தொடங்கும். செப்டம்பர் எட்டாம் தேதி(மேரி மாதா அவதரித்த திருநாள்) வரை இந்த திருவிழா கொண்டாடப்படும். திருவிழா நடைபெறும் 10 நாட்களும் தமிழ், ஆங்கிலம், மலையாளம், கொங்கணி உள்பட பல்வேறு மொழிகளில் சிறப்பு திருப்பலிகள் நடைபெறும்.
இந்த ஆண்டுக்கான வேளாங்கண்ணி மாதா பேராலய திருவிழா இன்று மாலை கொடியேற்றத்துடன் தொடங்கவுள்ளது. முன்னதாக கொடி புனிதம் செய்யப்பட்டு வேளாங்கண்ணியின் முக்கிய வீதிகளில் பவனியாக எடுத்து செல்லப்படும். மீண்டும் ஆலயம் வந்ததும் கொடியேற்றம் நடைபெறும்.அப்போது கண்ணைக்கவரும் வாண வேடிக்கைகளும் நடைபெறும். அதைத்தொடர்ந்து சிறப்பு திருப்பலிகள் நடைபெறும்.
திருவிழாவையொட்டி வேளாங்கண்ணி பேராலயங்கள் வண்ண விளக்குகள் அலங்கரிக்கப்பட்டுள்ளது.
கொடியேற்ற விழாவில் பங்கேற்க தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து வேளாங்கண்ணி மாதா பக்தர்கள் பாதயாத்திரையாக வேளாங்கண்ணி வந்து குவிந்து உள்ளனர். இதனால் வேளாங்கண்ணியில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.
இந்த நிலையில், வேளாங்கண்ணி ஆண்டு பெருவிழாவையொட்டி நாகை, கீழ்வேளூர் வட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. உள்ளூர் விடுமுறையை ஈடுசெய்யும் விதமாக செப்டம்பர் 29-ந்தேதி வேலை நாளாக செயல்படும் என மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் தெரிவித்துள்ளார்.