உலகில் கலப்படமில்லாதது, தாய் அன்பும், தாய்ப்பாலும் தான் என்பார்கள். அதை நிரூபிக்கும் வகையில் கேரளாவில் ஒரு சம்பவம் நடந்துள்ளது. ஒரு தாயாக, ஒரு காவல் அதிகாரி செய்த அந்த செயல் தான் இன்று இந்தியா முழுவதும் பேசப்படுகிறது. அது என்னவென்று பார்ப்போம்.
பிகார் மாநிலம் பாட்னாவைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் கேரள மாநிலத்தில் தனது கணவர் மற்றும் நான்கு குழந்தைகளுடன் வசித்து வந்தார். பெண்ணின் கணவர் வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்தநிலையில் அந்த பெண் இதய நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். நான்கு குழந்தைகளுடன் எர்ணாகுளம் மருத்துவமனைக்கு சிகிச்சை பெற வந்திருந்தார். பெண்ணுக்கு கடும் மூச்சுத் திணறல் காரணமாக தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.
அவரது நான்கு குழந்தைகளும் வார்டுக்கு வெளியே என்ன நடக்கிறது என்று தெரியாமல் இருந்தனர்.அதில் ஒரு குழந்தை பிறந்த நான்கு மாதமே ஆகிறது. மூத்த குழந்தை தான் மற்ற 3 குழந்தைகளுக்கும் ஆக்டிங் தாயாக இருந்து தேற்றிக்கொண்டிருந்தார். ஆனால் தாய்ப்பாலுக்காக அழுத 4 மாத குழந்தைக்கு அந்த உடன்பிறப்பு என்ன செய்ய முடியும்.?
தாயி படுக்கை அருகே 4 குழந்தைகளையும் மருத்துவமனை நிர்வாகம் அனுமதித்தது. குழந்தைகளைப் பராமரிக்க யாரும் இல்லாத நிலையில், தற்காலிக ஏற்பாடாக கொச்சி நகர மகளிர் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டனர்அங்கும் அழுதபடி இருந்த 4 மாதக் கைகுழந்தைக்கு சிவில் காவல் அதிகாரி ஆர்யா முன்வந்து தாய்ப்பால் கொடுத்தார். இந்த காட்சியை அங்கு இருந்த அனைவரும் பாராட்டினர். தாய் அன்பையும், தாய்ப்பாலின் மகத்துவத்தையும் ஆர்யா இந்த உலகுக்கு காண்பிடித்து விட்டார் என பாராட்டினர். இந்த காட்சி சமூகவலைத்தளங்களிலும் பகிரப்பட்டு ஆர்யாவுக்கு பாராட்டுகள் குவிகிறது. பின்னர் குழந்தைகள் பராமரிப்பு இல்லத்திற்கு அந்த குழந்தைகள் மாற்றப்பட்டனர்.