தஞ்சை மாவட்டம் பாபநாசம் அரசு மருத்துவமனை, பாபநாசம் ரோட்டரி கிளப் இணைந்து தாய்ப் பால் வார விழாவை நடத்தியது. அரசு மருத்துவமனையில் நடந்த விழாவில் பாபநாசம் ரோட்டரி கிளப் தலைவர் சக்தி வேல் வரவேற்றார். பாபநாசம் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் குமரவேல், ரோட்டரி உதவி ஆளுநர் அறிவழகன் வாழ்த்தினர்.
குடந்தை அரசு மருத்துவமனைவியில் கண்காணிப்பு மருத்துவராக பணியாற்றி ஓய்வு பெற்ற டாக்டர் சாம்பசிவம் பேசினார். அவர் பேசியதாவது:
குழந்தை பிறந்து ஒரு மணி நேரத்திற்குள் தாய்ப் பால் தர வேண்டும். இதனால் தாயின் உதிரப் போக்கு நிற்கும். குழந்தைக்கு 2 வயது வரை தாய்ப் பால் தரலாம். குழந்தை பிறந்து 180 நாள் வரை கட்டாயம் தாய்ப் பால் மட்டுமே தர வேண்டும். அதன் பின்னர் இணை உணவு தரலாம். குழந்தைக்கு சீம்பாலே போதும். பால் போதாமல் குழந்தை அழவில்லை. தாயின் அரவணைப்பிற்காக அழுகிறது.
தாய்ப்பால் சுரப்பது மனம் சம்பந்தப் பட்ட விஷயம். விளம்பரங்களை நம்பி ஏமாற வேண்டாம். சிசேரியன் ஆன தாயும் குழந்தை பிறந்த உடன் தாய்ப் பால் தரலாம். எல்லாமே நடை முறையில் சாத்தியம். குழந்தை ஆரோக்கியமாக புத்தி சாலியாக இருக்க தாய்ப் பால் அவசியம். குழந்தைக்கு தேவை தாய்ப்பால். தாயின் அரவணைப்பு. பீடிங் பாட்டில் மூலம் குழந்தைக்கு எதுவும் தரக் கூடாது.
10 வயதிலேயே பெண் குழந்தைகள் பூப்பெய்வதற்கு நமது உணவு முறை தான் காரணம். அம்மாவிற்கு எந்த பத்தியமும் கிடையாது. முருங்கைக் கீரை தாய்ப் பாலை அதிகம் சுரக்க உதவும். பிறந்த குழந்தை தாயிடம் தான் இருக்க வேண்டும். தாய்ப் பால் தந்தால் தாயின் அழகு கூடும். தாய்ப் பால் தராத மார்பில் மார்பக புற்று நோய்க்கு வாய்ப்புண்டு. பிறந்த குழந்தைக்கு சீம்பாலை தவிர்த்து எதுவும் தரக் கூடாது. பிறந்த இரட்டை குழந்தைக்கும் தாய்ப் பால் தரலாம் .
இவ்வாறு டாச்டர் சாம்பசிவம் பேசினார். நிகழ்ச்சியில் அரசு மருத்துவமனை டாக்டர் தனம். நர்ஸ்கள், ரோட்டரி கிளப் செயலர் ரவி, பொருளாளர் ராமநாதன், முன்னாள் தலைவர்கள் அன்பு சீனிவாசன், சரவணன், விவேகானந்தம், பக்ருதீன், சுப்ரமணியன் உட்பட பலர் பங்கேற்றனர்.