தஞ்சாவூர் முனிசிபல் காலனியை சேர்ந்தவர் மதனகோபால். இவரது மனைவி ஈஸ்வரி (59). இவர்களின் மகன் ராகுல் (29). இவர் என்ஜினியரிங் முடித்துவிட்டு புதுக்கோட்டையில் தொழில் செய்து வந்தார். கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு மதனகோபால் இறந்து விட்டதால் வீட்டில் ஈஸ்வரி, ராகுல் மட்டும் வசித்து வந்தனர்.
கடந்த 2 நாட்களுக்கு முன்பு இரவில் வீட்டை உள்பக்கமாக தாழ்ப்பாள் போட்டு விட்டு ஈஸ்வரியும், ராகுலும் தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது கழிவறைக்கு சென்ற ஈஸ்வரிக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு கீழே விழுந்துள்ளார். இந்த சத்தம் கேட்டு அதிர்ச்சியடைந்து ராகுல் ஓடிச் சென்று பார்த்துள்ளார். அங்கு மயங்கிய நிலையில் ஈஸ்வரி கிடப்பதை பார்த்து அவரை மீட்டு சிகிச்சைக்கு அழைத்துச் செல்ல முயன்றார்.
ஆனால் அதற்குள் வீட்டிலேயே ஈஸ்வரி உயிரிழந்தார். தனது தாயின் மரணம் ராகுலை வெகுவாக பாதித்துள்ளது. தாயின் உடலை பார்த்து ராகுல் கதறி அழுதபடியே இருந்தார். தாய் இறந்த சோகத்தில் இருந்த ராகுல் மனமுடைந்து வீட்டிலேயே தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கடந்த 2 நாட்களாக ராகுல் வீடு பூட்டியே கிடந்துள்ளது. மேலும் வீட்டில் உள்ளே இருந்து துர்நாற்றம் வீசியதால் அக்கம் பக்கத்தினர் சந்தேகம் அடைந்து தஞ்சை மருத்துவக்கல்லூரி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடன் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் வீட்டு கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது அங்கு உடல் அழுகிய நிலையிலும் ஈஸ்வரியும், ராகுல் தூக்கில் பிணமாகவும் தொங்கினார். இருவரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தாய் இறந்த சோகத்தில் மகனும் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தஞ்சையில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.