அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே மீன்சுருட்டி – கல்லாத்தூர் சாலையை மாநில நெடுஞ்சாலையாக மாற்ற வேண்டுமென கிராம மக்கள் பலமுறை கோரிக்கை வைத்தும் பல்வேறு போராட்டங்கள் நடத்தியும், மாநில நெடுஞ்சாலையாக மாற்றுவதற்கு தமிழக அரசு இதுவரை எந்த முயற்சியும் எடுக்கவில்லை என்பதை வலியுறுத்தி, மீன்சுருட்டி கடைவீதியில் 300-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் கருப்பு ஆடை அணிந்து நூதன ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையான மீன்சுருட்டி- கல்லாத்தூர் சாலையை மாநில நெடுஞ்சாலையாக மாற்றுவதற்கு தமிழக அரசு இனியும் காலம் தாழ்த்தக்கூடாது. உடனடியாக மாநில சாலைக்கு
டெண்டர் அறிவித்து சாலைப் பணிகளை தொடங்க வேண்டும், தொடங்காத பட்சத்தில் அடுத்த கட்டமாக மக்களை திரட்டி தொடர் போராட்டத்தில் ஈடுபடுவோம் என அரசுக்கு மீன்சுருட்டி – கல்லாத்தூர் சாலை சீரமைப்பு போராட்டக் குழுவினர் ஆர்ப்பாட்டத்தின் வாயிலாக எச்சரிக்கை விடுத்துள்ளனர். போராட்டத்தில் மீன்சுருட்டி, குண்டவெளி, வெத்தியார்வெட்டு உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் இருந்து 300 – க்கும் மேற்பட்ட கிராம மக்கள் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.