திங்கட்கிழமை தோறும் திருச்சியில் மனுநீதி முகாம் நடத்தப்படுகிறது. அன்றைய தினம் மாவட்டம் முழுவதும் இருந்து மக்கள் திருச்சி வந்து தங்கள் பிரச்னைகளை மனுவாக எழுதி கலெக்டரிடம் கொடுக்கிறார்கள். அந்த மனுக்கள் கலெக்டர் அங்கேயே படித்து உடனடியாக தீர்வு காணும் பிரச்னைகளை அந்த இடத்திலேயே தீர்த்து வைக்கிறார்.
சில பிரச்னைகள் சம்பந்தப்பட்ட துறைகள் மூலம் விசாரணை செய்யப்பட்டு தீர்வு காண வேண்டும் என்ற நிலை இருந்தால் அந்த துறைகளுக்கு அந்த மனுக்கள் அனுப்பி வைக்கப்படும். மனு கொடுத்தவர்களுக்கும் அதற்கான ரசீது வழங்கப்படும். எனவே மாவட்டத்தின் கடைகோடி கிராமங்களில் இருந்து பாமர மக்களும் வந்து மனு எழுதி கொடுத்து பரிகாரம் தேடுகிறார்கள்.
இப்படி மனுநீதி நாள் முகாமுக்கு வரும் பாமர மக்கள் மனு எப்படி எழுதுவது என்ன என்ற விவரம் அறியாதவர்களாக இருப்பதால் அவர்களுக்கு மனு எழுதி கொடுப்பதற்காகவே திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் மனு நீதி முகாம் நடைபெறும் இடத்திலேயே தன்னார்வ சேவை சங்கங்களின் கூட்டமைப்பை சேர்ந்த 12 பேர் இலவசமாக மனு எழுதி கொடுக்கிறார்கள். திருச்சியில் கடந்த 2009 ஜனவாி மாதம் முதல் இந்த சேவையை அவர்கள் செய்து வருகிறார்கள்.
ஆனால் கலெக்டர் அலுவலகத்திற்கு வெளியிலேயே 20க்கும் மேற்பட்டவர்கள் மனு எழுதி கொடுக்கிறார்கள். அவர்கள் திங்கட்கிழமை தோறும் காலையிலேயே அங்கு முகாம் போட்டு விடுகிறார்கள். கலெக்டர் அலுவலகத்துக்கு வரும் கிராமத்து மக்கள், அப்பாவி மக்களை அடையாளம் கண்டுகொள்ளும் அவர்கள், மனு கொடுக்கவா போகிறீர்கள், இந்த மனு உங்கள் கையில் இருந்தால் தான் உங்களை போலீசார் உள்ளே விடுவார்கள் எனக்கு தெரிந்த அதிகாரிதான், நான் போனில் அவரிடம் சொல்கிறேன், என ஏமாற்றி, சில நேரங்களில் மிரட்டி அவர்களை வலுக்கட்டாயமாக பிடித்து தங்கள் அருகில் உட்கார வைத்து அவர்களது பிரச்னைகளை கேட்டு மனு எழுதி கொடுக்கிறார்கள்.
மனு எழுதி முடித்ததும் அந்த அப்பாவி மக்களிடம் இருந்து ரூ.200 வரை வசூலித்து விடுகிறார்கள். அவ்வளவு பணம் இல்லை என்று சொல்கிறவர்களிடம் எரிகிற வீட்டில் பிடுங்கியது வரை லாபம் என்பது போல இருப்பதை பறித்தக்கொண்டு அனுப்பி விடுகிறார்கள். இதனால் பலர் ஊர் திரும்ப பணம் இல்லாமல் தவித்திருக்கிறார்கள். வாரந்தோறும் மனு எழுதி கொடுப்பவர்களின் கெடுபிடிகளால் ஏராளமான மக்கள் பாதிக்கப்படுகிறார்கள். இது குறித்து அவர்கள் வெளியே சொல்ல முடியாதபடி ஊருக்கு திரும்பும் அவல நிலை ஏற்படுகிறது. Tl;lzp
இது குறித்து தன்னார்வ சேவை சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் பால் குணா லோகநாத் கூறியதாவது:
சேவை சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பில் திங்கட்கிழமைகளில் நடைபெறும் மக்கள் குறைதீர் முகாமிற்கு வரும் பொது மக்களுக்கு 2009 முதல் இலவசமாக எழுதிக் கொடுப்பது மட்டுமல்லாமல், அவர்களுக்கு பல்வேறு விதமான ஆலோசனைகளையும் வழங்கி சரியான முறையில் மனு அளிப்பது எப்படி என்னென்ன ஆவணங்கள் தேவை என்பதையும் தெளிவுபடுத்தி, இந்த முகாமை அரசு அதிகாரிகள் காவல்துறையினர் மற்றும் தீயணைப்புத் துறையினருடன் இணைந்து, ஒருங்கே இப்போது மனு நீதி முகாம் சீரிய முறையில் நடைபெற தன்னார்வலர்களைக் கொண்டு தொண்டாற்றி வருகிறோம்.
ஆனால், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வெளியே மனு எழுதிக் கொடுக்கும் நபர்கள் ஏழை எளியவர்கள் விவரம் அறியாதவர்கள் இவரிடம் அதிகமான கட்டணம் வசூலிப்பது மட்டுமில்லாமல் , மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பல அதிகாரிகளை தெரியும் என்று கூறி விவரம் அறியாத மக்களிடம் பணத்தை பிடுங்குவதும் வாடிக்கையான ஒன்றாக இருக்கிறது. 12 தன்னார்வலர்கள் இலவச சேவை செய்து வரும் நிலையில், இப்படிப்பட்ட நபர்களிடம் பெரும் தொகையை இழந்து வருத்தத்துடன் வேதனையுடன் செல்லக்கூடிய நபர்கள் ஒவ்வொரு வாரமும் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இதற்கு அரசு முடிவு கட்ட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.