வங்கக்கடலில் உருவான மாண்டஸ்’ புயல் தீவிரமடைந்துள்ள நிலையில், தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. மாண்டஸ் புயல் இன்று நள்ளிரவு முதல் நாளை (சனிக்கிழமை) அதிகாலை வரையிலான இடைப்பட்ட காலத்தில் புதுச்சேரிக்கும், ஸ்ரீஹரிகோட்டாவுக்கும் இடையே, மாமல்லபுரம் அருகில் கரையை கடக்க வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், ‘மாண்டஸ்’ புயல், இன்று இரவு முதல் நாளை வரை கரையை கடக்கவுள்ள நிலையில், மாமல்லபுரத்தில் தேசிய பேரிடர் மீட்பு படையினர் தயார் நிலையில் உள்ளனர். மிதவை படகு, மருத்துவ உபகரணங்கள், ஜெனரேட்டர்கள், கயிறு, மர அறுவை இயந்திரங்கள், ஆக்சிஜன் சிலிண்டர்கள் என அனைத்தும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.
புயலின் முதல் பகுதி கரையை தொட்டது முதல் சுமார் 2 அல்லது 3 மணி நேரம் அது கரையை கடக்கும் என்பதால் பேரிடர் மீட்பு படையினர் ஆயத்தமாக உள்ளனர். கடற்கரையோரம் உள்ள மக்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டு உள்ளனர்.
வழக்கமாக மாமல்லபுரத்திற்கு சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வருவார்கள். நேற்று முதல் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டு உள்ளது. இதனால் கடற்கரை பகுதி மக்கள் நடமாட்டமின்றி காட்சி தருகிறது.
அதே நேரத்தில் மாமல்லபுரம் மற்றும் அதனை ஒட்டி உள்ள பகுதிகளில் 10 அடிக்கும் அதிகமான உயரத்திற்கு கடும் இரைச்சலுடன் ராட்சத அலைகள் எழும்புகிறது. கடற்கரை பகுதிக்கு யாரும் வரமுடியாதபடி பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.