வங்க கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி புயலாக மாறி உள்ளது. இதற்கு மாண்டஸ் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த புயல் தீவிர புயலாக மாற வாய்ப்பு உள்ளது. எனவே தமிழக கடலோர மாவட்டங்களில் இன்று கடல் சீற்றமாக காணப்பட்டது. சென்னை மெரினா, பட்டினப்பாக்கம், காசிமேடு, திருவொற்றியூர் மற்றும் நாகை உள்பட அனைத்து இடங்களிலும் கடலில் ராட்சத அலைகள் எழுந்தன. பல அடி உயரத்துக்கு கடுமையான சீற்றத்துடன் கடல் காணப்பட்டது. இதை தொடர்ந்து மெரினா உள்ளிட்ட கடலோர பகுதிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டிருந்தன. புயலுக்கு பயந்து மெரினா கடற்கரைக்கு மக்கள் அதிகமாக செல்லவில்லை. ஒரு சிலர் மட்டுமே கடலோர பகுதிகளில் காணப்பட்டனர். அவர்களையும் போலீசார் வெளியேறுமாறு எச்சரித்ததை காண முடிந்தது.
. புயலால் கடலோர பகுதிகளில் பலத்த காற்றும் வீசுகிறது. படகுகள் காற்றில் தூக்கி வீசப்பட்டு விடக்கூடும் என்பதால் கயிற்றில் கட்டி வைத்திருந்தனர். சென்னை மாநகர் முழுவதுமே குளிர்ந்த காற்று வீசி இதமான சூழல் நிலவியது. லேசான சாரல் மழையும் பெய்து கொண்டே இருக்கிறது. பழவேற்காடு பகுதியில் கடல் அலை பலத்த சீற்றத்துடன் வீசுகிறது.புயல் சின்னம் காரணமா தூத்துக்குடி, சீரடி, மங்களூர் ஆகிய இடங்களில் இருந்து சென்னை வரவேண்டிய 6 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.
தஞ்சை, மயிலாடுதுறை, நாகை உள்ளிட்ட இடங்களிலும் கடுங்குளிர்காற்றுடன் மழையும் பெய்து வருகிறது. சென்னை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட பல மாவட்டங்களில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உளளது.
கனமழை குறித்து தலைமை செயலாளர் இறையன்பு அனைத்து மாவட்ட கலெக்டர்களுடன் தொடர்பு கொண்டு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கும்படி உத்தரவிட்டார்.