ஜனாதிபதி திரவுபதி முர்முவின் அழைப்பை ஏற்று, மாலத்தீவு அதிபர் முகமது முய்சு இந்தியாவில் 5 நாள் அரசு முறை சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இதற்காக நேற்றுடில்லி வந்திறங்கிய அவரை மத்திய வெளியுறவு இணை மந்திரி கீர்த்தி வரதன் சிங் மற்றும் அதிகாரிகள் வரவேற்றனர்.
அதன்பின் அவரை மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் நேரில் சந்தித்து பேசினார். இந்நிலையில், டில்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் அதிபர் முய்சுவை, ஜனாதிபதி திரவுபதி முர்மு மற்றும் பிரதமர் மோடி இருவரும் இன்று வரவேற்றனர். அவருக்கு ராணுவ அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது.
இதன்பின்னர், ராஜ்காட் பகுதியில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்துவதற்காக அதிபர் முய்சு புறப்பட்டு சென்றார். இதனை தொடர்ந்து, பிரதமர் மோடியுடன் அவர் பேச்சுவார்த்தை நடத்துகிறார்.
இந்த சந்திப்பின் போது இந்தியா மற்றும் மாலத்தீவு ஆகிய இரு நாடுகளின் இருதரப்பு உறவு, பரஸ்பர பலன், பிராந்திய மற்றும் சர்வதேச விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்படுகிறது.